டொனால்ட் ட்ரம்ப், மோடி pt web
உலகம்

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. இருநாட்டு உறவை வலுப்படுத்துமா?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை கைவிலங்கிட்டு அந்நாடு திருப்பி அனுப்பும் சூழலில், பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக பிரான்ஸ் நாட்டில் இரு நாட்கள் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

கணபதி சுப்ரமணியம்

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க பிரெஞ்சு நகரமான மார்சேயில் முதலாவது இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைப்பது, சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலைத்திட்டத்தை பார்வையிடுவது, முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர்களின் போது உயிர்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மசார்குஸ் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது என பிரதமரின் திட்டம் அமைந்துள்ளது. அங்கிருந்து அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக புறப்படும் பிரதமர் மோடி, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு விரிவான உலகளாவிய திட்டமிட்ட கூட்டாண்மையை உருவாக்குவதில் அவரது முதலாவது பதவிக்காலத்தில் இருந்து இணைந்து பணியாற்றியதை மிகவும் அன்புடன் நினைவு கூர்வதாக தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை மேலும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், இருநாட்டு மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அந்நாடு கைவிலங்கிட்டு திருப்பி அனுப்புவது சர்ச்சையாகி உள்ளது. இவ்வாறு இந்தியர்கள் அவமதிக்கப்படக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த விவகாரம் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பின் பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் இறக்குமதி வரி அதிகரிக்கக் கூடாது என இந்திய தொழில்துறையினர் கருதுகின்றனர். அதேபோல இந்திய தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு கிடைக்கும் ஹெச்1பி போன்ற விசாக்கள் தொடர்ந்து தடையின்றி கிடைக்க வேண்டும் என்று இந்திய நிறுவனங்கள் விரும்புகின்றன. இதனால் இருநாட்டு சுற்றுப்பயணங்களும் இந்தியா- பிரான்ஸ்- அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.