கேஎல் ராகுலுக்கு கம்பீர் அநியாயம் செய்கிறார்.. முன்னாள் இந்திய கேப்டன் விமர்சனம்!
ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது வரும் பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதலியவற்றை இழந்திருக்கும் இந்திய அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் குறிக்கோளுடன் செயல்பட்டுவருகிறது.
சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல திட்டமிட்டிருக்கும் இந்திய அணி, பேட்டிங்கில் முன்னர் இருந்த குறைகளை எல்லாம் கலைந்து நம்பர் 8 பொசிஷன் வரை பேட்டிங் செய்யும் ஒரு வலுவான அணியை கட்டமைத்துவருகிறது.
அதற்காக இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கேஎல் ராகுலை நம்பர் 6 வீரராக களமிறக்கி சோதனை செய்துவருகிறது. துரதிருஷ்டவசமாக நம்பர் 1 மற்றும் நம்பர் 5 பேட்டிங் பொசிஷனில் சிறப்பாக விளையாடியிருக்கும் கேஎல் ராகுல், நம்பர் 6 பொசிஷனில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவருகிறார்.
கேஎல் ராகுலுக்கு முன்னதாக அக்சர் பட்டேலை களமிறக்கும் முடிவில், கேஎல் ராகுலை அவருடைய வழக்கமான பேட்டிங் பொசிஷனிலிருந்து மாற்றியுள்ளது இந்திய அணி நிர்வாகம்.
இந்த சூழலில் கேஎல் ராகுலை அவருடைய வழக்கமான பேட்டிங் பொசிஷனிலிருந்து மாற்றுவது முக்கியமான போட்டியில் இந்தியாவிற்கு பாதகமாக அமைந்துவிடும் என முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எச்சரித்துள்ளார்.
கேஎல் ராகுலுக்கு கம்பீர் அநியாயம் செய்கிறார்..
தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “கேஎல் ராகுலை இந்திய அணி நிர்வாகம் தவறான இடத்தில் விளையாடிவருகிறது. அக்சர் பட்டேல் 30, 40 ரன்கள் அடித்தாலும், கேஎல் ராகுலை நம்பர் 6,7-ல் களமிறக்குவது தவறானது. ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 5 இடத்தில் சிறந்த சராசரியை வைத்திருக்கும் ஒரு வீரரை எப்படி நீங்கள் நம்பர் 6, 7-ல் களமிறக்குவீர்கள்.
கம்பீர் நீங்கள் கேஎல் ராகுலுக்கு செய்வது முற்றிலும் அநியாயமானது. உங்களுக்கு மிடில் ஆர்டரில் லெஃப்ட், ரைட் காம்பினேஷன் வேண்டுமானால், டாப் ஆர்டரில் தேவையில்லையா. நீங்கள் இந்த முயற்சியில் கேஎல் ராகுலையும் இழக்கிறீர்கள், ரிஷப் பண்ட்டையும் இழக்கிறீர்கள். ஸ்பின்னர்களை டார்கெட் செய்யவேண்டுமானால் அக்சர் பட்டேலுக்கு பதில் பண்ட்டையே விளையாடலாமே.
கேஎல் ராகுலை தொடர்ந்து நம்பர் 6-ல் விளையாடினால், சாம்பியன்ஸ் டிராபியில் முக்கியமான போட்டியில் இந்தியா மாட்டிக்கொள்ளும், அக்சர் பட்டேல் கேஎல் ராகுலுக்கு முன்னதாக இறங்கி 100 ரன் அடித்திருந்தாலும் ராகுலை பின்னுக்கு தள்ளுவது தவறானது” என்று விமர்சித்துள்ளார்.