ஜாங்யூஷியா எக்ஸ் தளம்
உலகம்

சீனா | நெருங்கிய கூட்டாளியைப் பதவிநீக்கம் செய்த அதிபர்.. காரணம் என்ன? யார் இந்த ஜாங்யூஷியா?

1966-76 கலாசாரப் புரட்சிக்குப் பிறகு, CMC-யில் பதவியில் இருக்கும் ஒரு ஜெனரல் பதவி நீக்கம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த நடவடிக்கை, ஜின்பிங் தலைமையிலான முழு ஆணையத்தையும் கிட்டத்தட்ட உலுக்கியுள்ளது.

Prakash J

சீன ராணுவத்தின் உயர்மட்டத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் ஜாங்யூஷியா (Zhang Youxia), அந்நாட்டின் அணுஆயுதத் திட்டம் குறித்த ரகசியங்களை அமெரிக்காவிற்கு கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சீன ராணுவத்தின் உயர்மட்டத் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் ஜாங்யூஷியா (Zhang Youxia), அந்நாட்டின் அணுஆயுதத் திட்டம் குறித்த ரகசியங்களை அமெரிக்காவிற்கு கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக ஓர் அதிகாரியை பதவி உயர்வு செய்வது உட்பட அதிகாரப்பூர்வ செயல்களுக்காக அவர் லஞ்சம் பெற்றதாகவும் WSJ அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. 1966-76 கலாசாரப் புரட்சிக்குப் பிறகு, CMC-யில் பதவியில் இருக்கும் ஒரு ஜெனரல் பதவி நீக்கம் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இந்த நடவடிக்கை, ஜின்பிங் தலைமையிலான முழு ஆணையத்தையும் கிட்டத்தட்ட உலுக்கியுள்ளது. மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த 75 வயதான ஜாங், அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டவர்.

ஜின்பிங், ஜாங்யூஷியா

அவர் ஊழல் செய்தது மற்றும் அரசியல் குழுக்களை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின்கீழ் விசாரணையை எதிர்கொண்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டு ராணுவத்தில் முன்னெடுத்து வரும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஏவுகணைப் படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் ஊழல் மற்றும் ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் நீக்கப்பட்டுள்ளனர். 2012இல் ஜின்பிங் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2,00,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளைத் தண்டித்துள்ள ஒரு பரந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

யார் இந்த ஜாங்யூஷியா?

பெய்ஜிங்கில் பிறந்த ஜாங்யூஷியா, 1968இல் இராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாகப் பதவிகளில் உயர்ந்து 2012இன் பிற்பகுதியில் PLAஇன் நவீனமயமாக்கல் இயக்கம் வேகமெடுத்ததால், இராணுவ ஆணையத்தில் சேர்ந்தார். கடைசியாக, ஜாங்யூஷியா மிகவும் மூத்த ஜெனரலாக இருந்தார். இராணுவ கட்டளை அமைப்பில் ஜின்பிங்கிற்கு அடுத்தநிலையில் இருந்தார். மேலும் நீண்டகாலமாக ஜின்பிங்கின் நெருங்கிய இராணுவ கூட்டாளியாகக் கருதப்பட்டார். மேலும் ஜின்பிங் மற்றும் ஜாங் இருவரும் வடமேற்கு மாகாணமான ஷான்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், 1940களின் உள்நாட்டுப் போரில் ஒன்றாகப் போராடிய முன்னாள் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

ஜாங்யூஷியா

தவிர ஜாங், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரடுக்கு பொலிட்பீரோவின் உறுப்பினராகவும் இருந்தார். போர் அனுபவம் கொண்ட ஒரு சில மூத்த அதிகாரிகளில் ஒருவராகவும் இருந்தார். வழக்கமான இராணுவ நடைமுறையின் அடிப்படையில், ஜாங் 2022ஆம் ஆண்டில் 72 வயதில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய இராணுவ ஆணையத்தில் (CMC) தனது நெருங்கிய மற்றும் அனுபவம் வாய்ந்த கூட்டாளியான ஜாங்கை மூன்றாவது முறையாக உயர் இராணுவ ஆலோசகராக வைத்திருக்க வேண்டும் என ஜின்பிங் விரும்பியதாகக் கூறப்படுகிறது.