சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வாக எதிர்ப்பு: நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்!

சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வாக எதிர்ப்பு: நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்!
சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்வாக எதிர்ப்பு: நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்!

சீன அதிபராக ஜி ஜின்பிங்கே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படபோவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

சீனாவில் போராட்டங்கள் அரிதானவை! மேலும் சீன ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய செய்திகள் அரிதிலும் அரிதானவை! சீனாவில் தற்போதும் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இதனால் அங்கு போராட்டம் என்பதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் தற்போது சீன மக்கள் எப்போதும் இல்லாத வகையில் விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டு இருக்கின்றன.

மேலும் அவர் கடைபிடித்து வரும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கோவிட் கொள்கை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாகைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. "பிரிட்ஜ் மேன்" என்று அழைக்கப்படும் அடையாளம் தெரியாத நபரால் இந்த பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதாகைகள் கொண்ட புகைப்படங்களோடு அந்நாட்டு சமூக வலைதளங்களில் "I saw it" என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. எனினும், இதற்கு காரணமானவர்கள் யார் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

மேம்பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பேனரில், “வேலை நிறுத்தத்தில் ஈடுபடுங்கள்! சர்வாதிகாரியும் தேசத் துரோகியுமான ஜி ஜின்பிங்கை அகற்றுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பில் அரங்கில் நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com