ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்திய பல இடங்களில் வாழும் இஸ்ரேலிய மக்களின் மனதில் ஒரே கேள்விதான் மீண்டும் மீண்டும் எழுந்தது. எப்படி இதனைக் கணிக்க முடியாமல் இஸ்ரேல் அரசு கோட்டை விட்டது என்பதுதான் அது. ஆம், இஸ்ரேலிய மக்களால் மட்டுமல்ல, உலகின் சூப்பர் பவர் தேசங்களால்கூட அந்தப் புதிருக்கான விடையை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
வான் வழித் தாக்குதல், நில வழித் தாக்குதல் , நீர் வழித் தாக்குதல் என மும்முனை தாக்குதலை தனி ராணுவம் வைத்திருக்கக்கூடிய அரசுகள்தான் நடத்த முடியும். ஆனால், இப்படிப்பட்ட மும்முனைத் தாக்குதலை நடத்தி இஸ்ரேலை நிலைகுலையச் செய்திருக்கிறது ஹமாஸ். முதலில் டிரோன்களின் மூலம் சிறிய அளவில் தாக்குதல் நடத்தியது ஹமாஸ்.
ஆனால் இஸ்ரேலிய அரசின் கவனத்தைத் திசைதிருப்பவே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தற்போது வரும் செய்திகள் சொல்கின்றன. சில மணி நேரங்களிலேயே வான் வழி தாக்குதலில் ஈடுபட்டு, அதிலிருந்து சுதாரிப்பதற்குள் காஸா பகுதிக்கு அருகே இருக்கும் இஸ்ரேல் பகுதிகளுக்குள் புகுந்து இஸ்ரேலிய மக்களை சிறைப்பிடித்தும், சிலரை சுட்டுவீழ்த்தியும் இருக்கிறார்கள்.
பல திசைகளிலிருந்து இஸ்ரேலைத் தாக்கியிருக்கிறார்கள். இஸ்ரேலிய ராணுவத்தைக் குறிவைத்துத் தாக்குவது, ராணுவ வீரர்களை சிறைபிடிப்பது, ராணுவ வாகனங்களை சிறைப்பிடிப்பது என ஹமாஸின் இந்த விஸ்வரூப முன்னேற்றத்தை இன்னும் இஸ்ரேலால் நம்ப முடியவில்லை என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். ஒரு தேசத்தை நிலைகுலையச் செய்வதற்கு வெறும் ஆயுதங்கள் மட்டும் போதாது என்பதை உணர்ந்த ஹமாஸ் இந்த முறை சைக்காலஜிக்கலாக சில விஷயங்களை அணுகியது. அதில் கிட்டத்தட்ட வெற்றியும் கண்டிருக்கிறது.
இஸ்ரேல் விடுமுறைக் கொண்டாட்டங்களில் இருந்தபோது தாக்கியிருக்கிறது. இதுவும் இஸ்ரேல் அரசிடமிருந்து கற்றுக்கொண்டதுதான். ஹமாஸ் அப்படி இந்தமுறை பல தேசத்து மக்கள் பங்காற்றிய இசை நிகழ்ச்சிக்குள் புகுந்து அவர்களையும், இஸ்ரேலிய மக்களையும் சிறைபிடித்து காஸா ஸ்டிரிப் பகுதிக்குள் சென்றிருக்கிறார்கள்.
இதுதான் தற்போது நடக்கும் போரை உலக அளவில் பேசுபொருளாக மாற்றி இருக்கிறது. இதற்கு முன்பு இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நிகழ்ந்த போர்களைவிடவும் இதனை உன்னிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட தேசங்கள் அணுகுவது இதன் காரணமாகத்தான்.
வலதுசாரி அரசியல்வாதியான பெஞ்சமின் நெத்தான்யூதான் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர். எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு வாரமும் போராட்டங்களில் ஈடுபட்டாலும், அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், எல்லா அமைப்புகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு தனி ராஜாங்கமே நடத்திவருகிறார் நெத்தான்யூ என குற்றம் சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சிகள். எதிர்க்கட்சிகளை கட்டுக்குள் கொண்டுவருவதில் இஸ்ரேலிய உளவுப்படை அதீத கவனம் செலுத்தியதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது ஹமாஸ் குழு.
இஸ்ரேலின் பல பகுதிகளில் சுரங்கப்பாதைகளை ஹமாஸ் குழு அமைத்திருக்கிறதாம். அதன் மூலமாகத்தான் கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்குதல்களை அவர்களாக நடத்தமுடிகிறது என்கிறார்கள்.
இஸ்ரேலுக்கு இருக்கும் கட்டமைப்புகளுடன் ஒப்பிட்டால் ஹமாஸிடம் இருப்பதெல்லாம் ஒன்றுமே இல்லைதான். அதனால்தான் விதவிதமான டெக்னிக்குகளின் மூலம் இஸ்ரேலுக்கு நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறார்கள். ஹமாஸ் செய்யும் ஒவ்வொரு நகர்வுக்கும் அதிகமாக பாதிக்கப்படப்போவது காஸாவில் இருக்கும் பாலஸ்தீனியர்கள்தான்.
இந்த நிலையில்தான் ஹமாஸின் மூத்த அதிகாரியான அலி பராக்கே அளித்த பேட்டியை நாம் நினைவுகூர வேண்டியதிருக்கிறது. அது "2014ம் ஆண்டு நடந்த போரில் நாங்கள் 51 நாள்கள் தாக்குப்பிடித்தோம். இந்த முறை பல மாதங்களுக்கு எங்களால் தாக்குப்பிடிப்பதற்கான திறன் இருக்கிறது. காஸாவை இப்படி ஒன்றுமில்லாமல் மொத்தமாக அழிப்பதை எல்லோரும் சகித்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இந்த நிலை தொடர்ந்தால் எங்களின் கூட்டாளிகள் எங்களுடன் இந்த போரில் இணைவார்கள்.
ஹமாஸ் குழு எதிர்பார்ப்பது இதைத்தான். உலக அரங்கில் டெக்னிக்கல் சூப்பர்பவராக இருக்கும் இஸ்ரேலை நிலைகுலைய வைப்பது. அதனால்தான் இஸ்ரேல் இப்போது இன்னும் அதிவேகமாகத் தாக்குகிறது. இந்த மண் உறிஞ்சிக்கொள்ள முடியாத அளவுக்கு குருதி காஸாவில் வழிந்தோடுகிறது. விரைவில் அங்கு அமைதி திரும்ப வேண்டும். ஆனால், அப்போது அங்கு மனிதர்கள் இருப்பார்களா என்றுதான் தெரியவில்லை" என்பது.