அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது... இன்று காஸாவில் நிகழ்கிறது..!

தற்போது காஸாவில் இஸ்ரேல் அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கும் அரச வன்முறை, ஏனோ முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை நினைவுபடுத்துகிறது.

2009-ம் ஆண்டு இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய படுகொலையை தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியது இலங்கை இராணுவம். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ஏற்படுத்திய ரணம் இன்றுவரை ஆறாமல் இருக்கிறது. அதற்கான நீதியும் இன்றுவரை கிடைத்தபாடில்லை.

முக்கியமாக, பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள், இராணுவத்தின் வார்த்தைகளை நம்பி மக்கள் ஒன்றுகூடிய பகுதிகளுக்குள் நடத்திய தாக்குதல்கள் ஏராளம். முள்ளிவாய்க்கால் பகுதியில் கூட அப்படித்தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை அரசு அறிவித்த புதிய மக்கள் பாதுகாப்பு வளைய பகுதிக‌‌ளுக்குள்ளேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்பாவி மக்கள் பலர் மிகக் கொடூரமாக, ஈவு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர்.

அதேபோல, இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட புது மாத்தளன் பகுதியில் செயல்பட்ட முதியோர் இல்லங்களின் மீதுகூட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அரசின் வார்த்தைகளை நம்பி பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை ஏராளம்.

இப்போது காஸாவில் இஸ்ரேல் அரசு நிகழ்த்துக்கொண்டிருக்கும் அதிகார வன்முறைக்கு வருவோம். ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலுக்கான எதிர்வினைதான் இஸ்ரேல் செய்துகொண்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், பாலஸ்தீன பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குறிப்பாக , காஸா பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, நீர், எரிபொருள் போன்றவற்றை முற்றிலுமாக தடை செய்திருக்கிறது இஸ்ரேல் அரசு. காஸாவிலிருந்து வெளியேற வாய்ப்பிருக்கும் எல்லா வழிகளையும் அடைத்திருக்கிறது. காஸாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் ரஃபா வழியை மட்டும் திறந்து வைத்திருக்கிறது இஸ்ரேல்.

பற்றி எரியும் காஸா
பற்றி எரியும் காஸாPuthiyathalaimurai

மக்கள் பெருமளவில் ரஃபா பகுதிக்கு வருகிறார்கள் என அறிந்ததும், அந்த பகுதிகளில் குண்டுகளை வீசியிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை ரஃபா பகுதிகளில் இப்படியான குண்டுகள் வீசப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதே போல் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் என தெரிந்தே தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

gaza
இரவோடு இரவாக இஸ்ரேல் செய்த காரியம்: அழிவுப்பாதையில் காஸா நகரம்! - அதிர்ச்சித் தகவல்

காஸாவில் இருக்க முடியாது என தெரிந்த மக்கள்தானே அந்த இடத்தைவிட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு ஆதரவற்றவர்களாக உயிரையாவது காப்பாற்ற இடம்பெயர்கிறார்கள். அவர்களையும் குண்டு வீசித் தாக்குவது மனிதத்தன்மையற்ற செயல் என இஸ்ரேல் அரசுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகின்றன. கிட்டத்தட்ட முள்ளிவாய்க்கால் சம்பவத்தை மறு ஒளிபரப்பைத்தான் நாம் காஸாவில் எந்தவித குற்றவுணர்வுமின்றி பார்த்துவருகிறோம்.

காலம்தான் எல்லாவற்றுக்குமான மருந்தாக அமையும் என்பார்கள். ஆனால் அந்தக் காலம் எப்போது ஈழத் தமிழர்களுக்கும், காஸாவில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கும் வரும் என தெரியவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com