iran currency எக்ஸ் தளம்
உலகம்

தனது கரன்சியிலிருந்து 4 பூஜ்ஜியங்களை நீக்கும் ஈரான்.. என்ன காரணம்?

பல ஆண்டுகளாக நிலவி வரும் அதிக பணவீக்கம் மற்றும் கடுமையாக சரிந்த நாணயத்தை சமாளிக்கும் நோக்கில், ஈரான் தனது தேசிய நாணயமான ரியாலில் இருந்து நான்கு பூஜ்ஜியங்களை நீக்க உள்ளது.

Prakash J

பல ஆண்டுகளாக நிலவி வரும் அதிக பணவீக்கம் மற்றும் கடுமையாக சரிந்த நாணயத்தை சமாளிக்கும் நோக்கில், ஈரான் தனது தேசிய நாணயமான ரியாலில் இருந்து நான்கு பூஜ்ஜியங்களை நீக்க உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று, ஈரான். இந்நாட்டின் மீது அணுகுண்டு ஆராய்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்நாடு, கடுமையாகப் பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. ஈரானின் பணவீக்க விகிதமும் பல ஆண்டுகளாக சரிந்து வருகிறது. அறிக்கைகளின்படி, கறுப்புச் சந்தையில், ரியாலின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 1,100,000 ரியால்களுக்கு மேல் சரிந்துள்ளது. இதனால் அன்றாட பரிவர்த்தனைகள் சிக்கலாகின்றன. இந்த நிலையில்தான், தினசரி பரிவர்த்தனைசகளை எளிமையாக்கும் வகையில் ஈரான் அரசு, தனது கரன்சிகளில் இருக்கும் நான்கு ஜீரோக்களை நீக்க முடிவு செய்துள்ளது. இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஐ.நா. தடைகள் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுதல் ஆகியவற்றின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

iran currency

இதையடுத்து, தற்போது முன்மொழியப்பட்ட திட்டத்தின்கீழ், 10,000 பழைய ரியால்கள் என்பது தற்போது 1 புதிய ரியால் என மாற்றப்படுகிறது. இது நாணயத்திலிருந்து நான்கு பூஜ்ஜியங்களை திறம்படக் குறைக்கிறது. உதாரணமாக, முன்பு 1,000,000 ரியால்கள் எனச் சொல்லப்பட்ட நிலையில், அது இப்போது 100 புதிய ரியால்கள் என அழைக்கப்பட இருக்கிறது.

இந்தப் புதிய சீர்திருத்தம் தினசரி நிதிப் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்துதல், விலை நிர்ணய குழப்பத்தை நீக்குதல் மற்றும் பல ஆண்டுகளாக பொருளாதாரச் சவால்கள் மற்றும் சர்வதேச தடைகளுக்கு மத்தியில் ஈரானின்நாணயத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும், இந்த மாற்றம் பழைய மற்றும் புதிய ரியால்களை மூன்று ஆண்டுகள்வரை புழக்கத்தில்விட அனுமதிக்கும். இந்த மாற்றத்தை முழுமையாகச் செயல்படுத்த மத்திய வங்கிக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளது. இருப்பினும், சீர்திருத்தத்திற்கு ஈரானின் கார்டியன் கவுன்சிலின் ஒப்புதல் இன்னும் தேவைப்படுகிறது மற்றும் அதிபர் மசூத் பெஷேஷ்கியனால் சட்டமாக கையொப்பமிடப்பட வேண்டும்.

iran currency

மறுபுறம், ஈரான் மக்கள் தினசரி பரிவர்த்தனைகளுக்குத் தங்கள் கரன்சியில் இருந்து ஒரு பூஜ்ஜியத்தை நீக்கி, மீதமுள்ள தொகையை 'டோமன்' என்ற பெயரில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில்தான் அரசே 4 ஜீரோக்களை நீக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது அது, எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. அதேநேரத்தில், இந்தச் சீர்திருத்தம் வெளிநாட்டு வணிகங்கள் ஈரானிய சந்தையில் அதிக நம்பிக்கையுடன் ஈடுபட ஊக்குவிக்கும். பரந்த நிதி நடவடிக்கைகளுடன் சேர்ந்து பொருளாதாரத்தை படிப்படியாக உறுதிப்படுத்த இது உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.