கொல்லத் திட்டமிட்ட இஸ்ரேல்.. அவசரகால வழி மூலம் தப்பிய ஈரான் அதிபர்!
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்த ஈரான், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரான் அதிபர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஈரான் அதிபர் பெஷேஷ்கியனின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து இஸ்ரேல் கொலை செய்தது. அதேபாணியில், ஈரான் அதிபர் மீதான தாக்குதல் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, ஈரான் அதிபர் இருந்த கட்டடத்தின் நுழைவு வாயில்கள் மற்றும் வெளியேறும் பகுதிகளில், 6 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிபரை கட்டடத்திற்குள்ளே சிக்கவைக்கவும், காற்றோட்டத்தை தடைசெய்யவும், இஸ்ரேல் முயன்றதாக தெரிகிறது. இருப்பினும் அவர், அவசரகால வழி மூலம் தப்பித்துள்ளார். அண்மையில் ஈரான் அதிபர், தன்னை கொல்ல இஸ்ரேல் முயன்றதாகவும், அவர்கள் முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவும், நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.