பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பற்றிய மரண செய்திகளுக்கு இடையில், அவரது கடைசிப் பதிவு வைரலாகி வருகிறது. தவிர, அந்தப் பதிவு பல கேள்விகள் எழுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஊழல் உட்பட பல வழக்குகளில் சிக்கி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் உள்ளார். இதற்கிடையே, ’இம்ரான் கான் சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்றும் அவரது உடல் சிறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது’ என்றும் ஆப்கானிஸ்தான் டைம்ஸ் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இம்ரான் கான் மரணம் குறித்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவருடைய சகோதரிகள் மூவர், ’இம்ரானைக் கானைச் சந்திக்க நீதிமன்ற ஆணைகள் இருந்தும் சந்திக்க முடியவில்லை. சிறை நிர்வாகம் அனுமதிக்க மறுக்கிறது’ எனக் குற்றஞ்சாட்டியிருந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக இம்ரான் கான் குடும்பத்தினர் மற்றும் அவரது கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், இம்ரான் கானின் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கடைசிப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கடைசியாக, அதை நவம்பர் 5ஆம் தேதி பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் இராணுவத் தளபதியும் இப்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் சக்திவாய்ந்த தலைவருமான அசிம் முனீரையே அவர் திரும்பத் திரும்பக் குறிப்பிடுகிறார்.
அதில், ‘அசிம் முனீர் என்ற ஒரு நபர் தனது அதிகார மோகத்தைத் தீர்த்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். அசிம் முனீர் முழு நாட்டையும் தனி ஒருவராக நடத்துகிறார். அவர், வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. அனைத்து அதிகாரமும் ஒருவரின் கைகளில் உள்ளது. தன்னை சிறையில் அடைக்க சட்ட விசாரணைகளை வேண்டுமென்றே தடுக்க முனீரின் உத்தரவுகள் பயன்படுத்தப்பட்டன’ என அமீர் குறித்துப் பதிவிட்டுள்ள இம்ரான் கான், ‘நானும் எனது மனைவி புஷ்ரா பீபியும் எல்லா வகையான கொடுமைகளையும் எதிர்கொண்டோம். இருந்தும், அவற்றால் குனிந்துபோகவோ அடிபணியவோ மாட்டேன்’ என அதில் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானை சிறையில் அடைப்பது அசிம் முனீருக்கு ஒரு தனிப்பட்ட போராட்டமாக இருந்ததாகவும், அவர்கள் இருவருக்கும் நீண்டகாலமாக பகை இருந்ததாகவும் விவரமறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவேதான், இந்த இடைப்பட்ட நாட்களில் இம்ரான் கான் மரணம் பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றன. முனீருக்கும் கானுக்கும் இடையே இருந்த பழைய பகைதான் பிடிஐ ஆதரவாளர்களிடம் கேள்வியை எழுப்பத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இம்ரான் கான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக சிறை நிர்வாகம் தரப்பில் செய்திகள் வெளியாகி இருந்தன. எனில், அவர் உயிருடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், கடந்த 24 நாட்களில் யாரும் அவரிடமிருந்து ஏன் எந்தத் தகவலும் பெறவில்லை, அவரைப் பார்க்க மற்ற பார்வையாளர்கள் ஏன் மறுக்கப்படுகிறார்கள், அவரை முடக்கி வைக்கக்கூடிய அதிகாரம் யாருக்கு இருக்கிறது, அதன்பின் யாரெல்லாம் செயல்படுகிறார்கள், எதற்காக இந்த தீயசெயலில் அவர்கள் இறங்கியுள்ளனர்’ எனப் பல கேள்விகளை இம்ரான் கானின் ஆதரவாளர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இம்ரான் கானின் கடைசிப் பதிவு இருப்பதும் முக்கிய சந்தேகத்தை எழுப்புவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, ”தனது தந்தையின் உடல்நல விஷயத்தில் சர்வதேச சமூகமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தலையிட வேண்டும்” என இம்ரான் கானின் மகன் கோரிக்கை வைத்திருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.