அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாகவும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப் பொருள் பரவலை ஊக்குவிப்பதாகவும் அமெரிக்க தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமெரிக்க ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வெனிசுலா மீதான அமெரிக்கா தாக்குதலுக்கு கியூபா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தான், "அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபாதானா?" என்ற கேள்விக்கு, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, "கியூபா பெரிய சிக்கலில் இருக்கிறது" என்று ஒற்றை வரியில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரோவுக்கு கியூபாவே பாதுகாப்பு அளித்தது என்று குற்றம்சாட்டிய அவர், அடுத்தகட்டத் திட்டங்களை இப்போதே வெளிப்படையாகக் கூற முடியாது எனச் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அதாவது, 'கியூபா தப்பிக்க முடியாது' என்பதே அவரது மறைமுகப் பதிலாகப் பார்க்கப்படுகிறது.
பல தசாப்த கால அரசியல் பகை, ரஷ்யா மற்றும் சீனாவுடன் கியூபா கொண்டுள்ள நெருக்கமான உறவு, தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் கியூபாவின் தாக்கம் என அமெரிக்கா கியூபாவைத் தனது அடுத்த இலக்காகக் குறிவைப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து அமெரிக்கா செயல்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ரூபியோ, "வெனிசுலாவின் பராமரிப்பின்றி அழிந்துபோன எண்ணெய் கிணறுகளைச் சீரமைக்கப் பெரும் முதலீடு தேவை; வெறும் லாபத்திற்காக அமெரிக்கா அங்கு இறங்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
மதுரோவின் கைதுக்குப் பிறகு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோவுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்காலிகமாகப் பொறுப்பு துணை அதிபர் டெல்ஸி ரோட்ரிகஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவிலிருந்து பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், தற்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் மதுரோ இல்லாத சூழலில் அமெரிக்காவிற்கு இணங்கி நடப்பார்கள் என்பதே வாஷிங்டனின் கணக்காக உள்ளது. மொத்தத்தில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகள் மதுரோவோடு முடிந்துவிடப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.