அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆரம்ப வரி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், கூடுதல் வரி நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகவும், அதன்மூலம் உக்ரைனில் போரை தூண்டுவதாகவும் இந்தியா மீது குற்றம்சாட்டி, கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்தது. இதன்மூலம், அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கான வரியை, மொத்தமாக 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தொடர்ந்து, இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க தனது நிர்வாகம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, வரிகள் தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, ஆரம்ப வரி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 25% அபராத வரி நாளை (ஆகஸ்ட் 27)முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய பொருட்கள் மீதான 25 சதவீதம் அபராத வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு (EST) அமலுக்கு வருகிறது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர உள்ளது’ என அது தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டிருந்து. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது. தேதி, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, ’இந்திய விவசாயிகளின் நலன் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்யப்படாது’ என தெரிவித்தார். அதேநேரத்தில், இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கு இடமளிக்கும் வகையில், இந்தியா மீது கூடுதல் வரிகள் விதிப்பதை 90 நாட்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க-இந்திய தொழில்துறை அமைப்புகள் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரஷ்ய கச்சா எண்ணெயை தேசிய நலன் மற்றும் சந்தை விலை அடிப்படையில் கொள்முதல் செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவிலிருந்து எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் வரிகளைக் குறைக்கும்பட்சத்தில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இந்தியாவுக்கு அவகாசம் அளிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.