வரி தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படும் வரை... இந்தியாவுக்கு ட்ரம்ப் புது அறிவிப்பு!
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. ’அமெரிக்காவுக்கான வரி அதிகளவில் இருப்பதாலும், இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதாலுமே இத்தகைய வரி விதிப்பு’ என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், ’தேச நலனைக் கருத்தில் கொண்டே வர்த்தக விஷயங்களில் முடிவெடுக்கப்படும்’ என இந்தியா பதிலளித்திருந்தது.
இதற்கிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெகுவாக அதிகரிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அவர் சொன்னதுபோலவே, இந்தியாவுக்கு மேலும் 25% வரி விதித்தார். ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது விதிக்கப்பட்ட வரி மூலம் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப வரி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை இரட்டிப்பாக்க தனது நிர்வாகம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, வரிகள் தொடர்பான சர்ச்சை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ட்ரம்ப் விதித்த வரிகள், இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்காவின் சில்லறை வர்த்தக நிறுவனங்களான அமேசான், வால்மார்ட், டார்கெட் மற்றும் கேப் ((gap)) போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஆடைகள் இறக்குமதியை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் 50 சதவீத வரியை தொடர்ந்து, புதிய வரி விகிதங்கள் காரணமாக ஏற்றுமதியை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தசூழலில், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பருத்தி டி-சர்ட்கள் மற்றும் ஆடைகள் ஏற்றுமதியை அமெரிக்க இறக்குமதியாளர் நிறுத்தி வைக்குமாறு தெரிவித்ததாக திருப்பூர் ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் ஜவுளி மையமான திருப்பூரில் 20 ஆயிரம் உற்பத்தி அலகுகள் உள்ளன. 2 ஆயிரத்து 500க்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றன. இந்நிலையில், ஏற்கனவே பல பிரச்னைகளை சந்திக்கும் தங்களுக்கு இது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.