இந்தியாவுக்கு ட்ரம்ப் விதித்த 50% வரி.. எத்தகைய துறைகளுக்குப் பாதிப்பு?
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ள 50 சதவிகித வரியால் இந்திய ஏற்றுமதியில் என்னென்ன பாதிப்புகள் நேரிடும் என்பதை பார்க்கலாம். இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவிகிதம் அளவுக்கு வரி விதித்துள்ளார். இதில் 25 சதவிகிதம் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ரஷ்யா உடனான வர்த்தக உறவுகளுக்கு எதிரான 25 சதவிகித அபராத வரி என்பது 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஜவுளி, தோல், ரசாயனங்கள், காலணிகள், நகைகள், ஜெம் கற்கள், இறால் ஆகியவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்று வணிக நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்திய இறால்களை வாங்குவதற்கு கூடுதலாக பணம் செலவிட வேண்டி இருக்கும்.
ஆர்கானிக் ரசாயனங்கள் கூடுதலாக 54 சதவிகித வரி விதிப்புக்கு உள்ளாகக் கூடும். கார்பெட் பொருட்களுக்கு 52 புள்ளி 9 சதவிகிதம் வரி விதிக்கப்படக் கூடும். ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றுக்கு 60 புள்ளி 3 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படக்கூடும். வைரம், தங்கம், மரசாமான்கள், மெத்தைகள் உள்ளிட்டவையும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வரியால் பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் 55 சதவிகித ஏற்றுமதி உடனடியாக பாதிகப்படும். ஏற்கெனவே அமெரிக்க இறக்குமதியாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஏற்றுமதி ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஏற்றுமதியால் லாபம் இல்லை என்று கூறும் இந்திய ஏற்றுமதியாளர்கள் தற்போதைய சூழலில் தங்கள் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்படும் என்கின்றனர்.