அலெக்சாண்ட்ரோ போராக்ஸ் X
உலகம்

”இந்தியர்களை கொல்* ஆவலாக இருந்தேன்” கைது செய்யப்பட்ட இளைஞர்.. வெளியான அதிர்ச்சிப் பின்னணி!!

இந்தியர்களை கொலை செய்யும் நோக்கில், கோயில் ஒன்றைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்த திட்டமிட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்தான அதிர்ச்சிகரப் பிண்ணனி தற்போது வெளியாகியிருக்கிறது.

Premkumar S

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ நகருக்கு அருகிலுள்ள பாலடைன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்ட்ரோ போராக்ஸ் (Alexandro Borax). 19 வயதான இவர், அப்பகுதியில் இருந்த உணவகம் ஒன்றில் காசாளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அதாவது ஆகஸ்ட் 11-ம் தேதி அரோரா பகுதியில் உள்ள ஒரு இந்துக் கோயிலில் துப்பாக்கிச் சூடு நடத்தி பெருமளவிலான இந்தியர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் சென்றுள்ளார். எனினும், துப்பாக்கியில் கோளாறு ஏற்பட்டு செயல் இழந்ததால் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது.

இதுதொடர்பாக, சக ஊழியர்களிடம் இதுகுறித்து போராக்ஸ் கூறிய நிலையில், அவர்கள் காவல்துறைக்கு புகார் பேரின் பேரில் அலெக்சாண்ட்ரோ போராக்ஸ் அன்றைய தின பிற்பகலிலேயே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா

அதன்படி, போராக்ஸ் தனது பணியிடத்தில் வெள்ளையின மேலாதிக்கக் கருத்துகளை வெளிப்படையாகப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தியர்கள் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டிருந்ததாகவும், நாஜிக்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய வன்முறை குறித்துப் பேசியதாகவும் அவரது சக ஊழியர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இந்தியர்களைக் கொல்ல வேண்டும் என ஆவலாக இருந்தேன் எனவும் ஞாயிற்றுக் கிழமை ஒரு முக்கியமான நாள் என தனது சக ஊழியர்களிடம் தெரிவித்திருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியர்கள் மட்டுமின்றி யூதர்கள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையும் குறிவைத்து, அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்லும் திட்டம் அடங்கிய எட்டு பக்க ஆவணத்தை அவர் சக ஊழியருக்கு அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ”நான் ஏன் சண்டையிட்டேன்” எனப் பெயரிடப்பட்ட அந்த ஆவணத்தில், வெள்ளையின மேலாதிக்கம் மற்றும் நவ நாஜி கொள்கைகள் தொடர்பான கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இனவெறியை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணம், பபோராக்கிஸின் தாக்குதல் திட்டம் குறித்த விசாரணையில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.

இந்த வழக்கில், பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்தது மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் போராக்ஸ் மீது சுமத்தப்பட்டுள்ளன. அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவரைத் தொடர்ந்து காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.