மொத்த வெடி குண்டுகளின் தாய்.. ஈரானை குளோஸ் பண்ணும் US? புல் பூண்டு கூட முளைக்காது!
செய்தியாளர் - கார்த்திகேயன்
அனு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் கூட்டுத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதால், அன்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. மேலும், தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் நீரிணையை மூடியதால், உலக அளவில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த போர் தொடங்கி 7 மாதங்கள் ஆகியும், இன்னும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த முடியவில்லை.
இருப்பினும், பல்வேறு அழுத்தங்களையும், பொருளாதார தடைகளையும் விதித்து, தனது வழிக்கு ஈரானை கொண்டு வர பல்வேறு முயற்சிகளை அமெரிக்கா எடுத்தது. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இப்படியான சூழ்நிலையில், ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, வெடி குண்டுகளுக்கெல்லாம் தாய் என்று அழைக்கப்படும் குண்டை, அமெரிக்கா பயன்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, GBU-43/B MOAB என்ற வெடி குண்டு தான், இருக்கும் குண்டுகளுக்கெல்லாம் தாய் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெடிகுண்டை, ஈரானின் ஆற்றல் கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது, அமெரிக்க ராணுவம் பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் நேரடிப் போர் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டால், இந்த அபாயகரமான வெடிகுண்டு பயன்படுத்தப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த தகவலின் ஒரு பகுதியாக, ஈரானின் இலக்குகளை துவம்சம் செய்வதற்கு, கூடுதல் ஆயுத தொகுப்புகளை உருவாக்குமாறு, ராணுவத்திற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் பிகாக்ஸ் மவுண்டைன் உள்ளிட்ட முக்கியமான அனுசக்தி தளங்கள் தான், அமெரிக்காவின் குறியாக இருக்கப் போவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணுசக்தி தளங்கள் போன்ற, மிகப் பாதுகாப்பான மற்றும் நிலத்தடி ஆழத்தில் அமைந்துள்ள இலக்குகளைத் தகர்க்க பெரிய அளவிலான குண்டுகள் தேவைப்படுவதால், இந்த MOAB ஆயுதத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக, அமெரிக்கா பரிசீலிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை செயல்பாட்டு வடிவம் பெற்றால், 3-ஆம் உலகப் போரே ஏற்படும் சூழல் உருவாகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்கா தனது ராணுவ நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்பது, கேள்விக்குறி தான் எனவும், நிபுணர்கள் கணிக்கின்றனர். வர உள்ள அமெரிக்காவின் இடைக்கால தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

