அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்.. குலுங்கியது அட்லாண்டிக் பெருங்கடல்! நெருங்கும் இயற்கை பேரழிவு?
செய்தியாளர் - கார்த்திகேயன்
மத்திய அமெரிக்க நாடாக உள்ள பனாமாவில், கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி அன்று, சக்திவாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டது. ஹெர்ரா மாகாணத்தின் பிடலோசா அரிபா பகுதிக்கு அருகே, பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அண்டை நாடான கொலம்பிய வரை உணரப்பட்டது. பூமியின் கரீபியன் தட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்களே பனாமா, கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளிலும், நிலநடுக்கங்களை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.
இதேபோல, அட்லாண்டிங் பெருங்கடலில் ஏற்பட்ட இரு மிகப்பெரிய நிலநடுக்கங்கள், தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய இயற்கை பேரழிவை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி அன்று, அட்லாண்டிக் பெருங்கடலில் 6.7 மற்றும் 6.9 ரிக்டர் அளவில், இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் பல்வேறு நிலநடுக்கங்களின் தொடர்ச்சியாகவே, இந்த சம்பவமும் பார்க்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள மத்திய அட்லாண்டிக் முகட்டில் தான், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலநடுக்கங்கள் மூலம் வெளியாகும் ஆற்றல், அமெரிக்காவின் புவிதட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். எனவே, அமெரிக்காவிலும் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, நில அதிர்வு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கங்கள், அந்தத் தட்டின் மீதான அழுத்தம் தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்கத் தட்டுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இந்த ஆற்றல் அடுத்ததாக வட அமெரிக்கத் தட்டுக்கு கடத்தப்படலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். நிலநடுக்கங்களை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது கடினம் என்றாலும், இந்த எச்சரிக்கையை எளிதில் புறக்கணிக்க முடியாது என்றும், நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

