அமெரிக்கா - ஈரான் போர் web
உலகம்

ஈரானை மீண்டும் தாக்கிய அமெரிக்கா.. மீண்டும் கேள்விக்குறியாகும் போர்நிறுத்தம்?

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஈரானியப் படகுகள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனை தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது. என்ன விவரம் என பார்க்கலாம்.

செய்தியாளர் - திவ்யா

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்கள் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதியன்று தொடங்கியது. போர் தொடங்கியதிலிருந்து, வளைகுடா பகுதியில் அமெரிக்காவுக்கு உதவி செய்த பல நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்தியது ஈரான். சேமிப்புக் கிடங்குகள், செயல்பாடுகளை நிர்வகிக்கும் கட்டளை மையங்கள், விமான தளங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் அமைப்புகள் உள்ளிட்ட குறைந்தது ஏழு நாடுகளில் உள்ள முக்கியமான அமெரிக்காவின் இராணுவத் தளங்களைத் தாக்கியது ஈரான் ராணுவம். இந்த மோதல் தொடங்கிய முதல் 3 வாரங்களில் மட்டும் ஈரானின் ஏவு​கணை மற்றும் டிரோன் தாக்குதல்​களால் அமெரிக்​கா​விற்கு சுமார் 1.4 பில்​லியன் டாலர் முதல் 2.9 பில்​லியன் டாலர் இழப்பு ஏற்பட்​டுள்​ள​தாக the wall street journal செய்தி வெளியிட்டிருந்தது.

ஈரான், அமெரிக்கா

இந்நிலையில், மத்திய கிழக்கு நாட்டின் அச்சுறுத்தல்களிலிருந்து நமது படைகளை பாதுகாக்கும் முயற்சிகள் என்று குறிப்பிட்டு, ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஏற்கனவே தள்ளாட்டத்தில் இருந்த அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மேலும் சீர்குலைந்துள்ளதாகத் தெரிகிறது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற அமெரிக்கத் தலைவர்கள் கூறியதைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது. இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச மேற்பார்வையின் கீழ் அகற்ற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையையும் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். இறுதி ஒப்பந்தம் எப்போது எட்டப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.