IRGC naval patrol at hormuz  web
உலகம்

ஹார்முஸ் நீரிணையில் 'Chicken Game'.. அமெரிக்கா - ஈரான் நேரடி மோதல்!

அமெரிக்காவும் ஈரானும், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட முக்கியத் தாக்குதல்களை நிறுத்தியிருந்தபோதிலும், மோதல் உண்மையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

PT WEB

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் நடந்து வருகிறது.  தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போரில் அமெரிக்காவும் ஈரானும், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட முக்கியத் தாக்குதல்களை நிறுத்தியிருந்தபோதிலும், மோதல் உண்மையில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உலகின் மிக முக்கியமான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் தொடர்கிறது. நிலைமை இரண்டு வெவ்வேறு திசைகளில் செல்லக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை, ஈரானின் கட்டுப்பாடு போன்றவை தொடர்ந்தால் நிலைமை மோசமடைந்து கடலில் இராணுவ மோதல்களுக்கு வழிவகுக்கலாம் அல்லது முழு அளவிலான போர் இருக்காது. ஆனால் பதற்றங்கள் முழுமையாக நீங்காமல் அவ்வப்போது சிறிய சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Iran seizes ship

பாரசீக வளைகுடாவில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்க ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை இன்னும் சிறிய, வேகமான படகுகளைப் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையே கப்பல் தாக்குதல், சிறைபிடிப்பு, துப்பாக்கிச் சூடு என யாரின் கட்டுப்பாடு அதிகம் இருக்கிறது என்ற போட்டி நிலவுகிறது. இதில் இரு தரப்பினரும் நேரடியாகப் போரிடாமல், கடலில் பொருளாதார அழுத்தம் மூலம் ஒருவரையொருவர் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அமெரிக்கா , ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் துண்டித்து, அதன் பொருளாதாரம் மீது தொடர்ச்சியான அழுத்தம் கொடுப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, ஈரான் தன்னால் எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய முடியாவிட்டால், மற்றவர்கள் அவ்வாறு செய்வதை அது மிகவும் அபாயகரமானதாக மாற்ற நினைக்கிறது.

iran - Hormuz

கோல்ட்மேன் சாக்ஸ் குளோபல் இன்ஸ்டிடியூட்டின் இணைத் தலைவரான ஜாரெட் கோஹன், இந்தச் சூழ்நிலையை "கடல் அகழிப் போர்" என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "கடல் வழி திறந்திருப்பதாகத் தோன்றலாம், ஆனால் ஈரான் விரும்பும் போதெல்லாம் உலகப் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு அதைத் தொடர்ந்து கட்டுப்படுத்தும்" என்றார்.

ஈரானிய ஆட்சி கவிழாத வரை, இந்த வழி முன்புபோல் சுதந்திரமாகவும் கணிக்கக்கூடியதாகவும் இருக்காது என்றும் போக்குவரத்துத் தடையின்றிச் செல்லலாம், ஆனால் ஈரானியர்கள் பகுதி அல்லது ஒருதலைப்பட்சமான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

US ship at hormuz

இந்தச் சூழ்நிலையை ’சிக்கன் கேம்’ (chicken game) என்று விவரிக்கிறார், இதில் அமெரிக்காவும் ஈரானும் மற்ற தரப்பு முதலில் கைவிடுவதற்காகக் காத்திருக்கின்றன. மற்ற தரப்பின் பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவது, இறுதியில் அவர்களைப் பின்வாங்கச் செய்யும் என்று ஒவ்வொரு தரப்பும் நம்புகிறது என்றார்.