பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்வில் ஆழமாக வேரூன்றியுள்ள இஸ்ரேலிய பாலியல் வன்முறை, சோதனச் சாவடிகள், சிறைச்சாலைகள், வீட்டு சோதனைகள், குடியேறிகளுடனான மோதல்கள் என பல இடங்களில் அதிகரித்துள்ளதாக ஐநா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காசாவில் பாலியல், இனப்பெருக்க சுகாதார வசதிகள் அழிவும், பெண்கள், சிறுமிகளின் உயிரிழப்பும் மறைமுக இன அழிப்புக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் காசா இடையே தொடங்கிய போர் 2025 வரை நீடித்தது. இந்தப் போரில், 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உட்பட 74 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் தான், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால், எகிப்தில் கையெழுத்தானது. இதன்மூலம் இஸ்ரேல் காசா இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
எனினும், காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் இஸ்ரேலியப் படைகளின் சோதனைகளும், அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான், பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதற்காக இஸ்ரேல், பாலியல் மற்றும் பாலின ரீதியிலான வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ஃபிரான்செஸ்கா அல்பானீஸ், ரீம் அல்சலேம், மைக்கேல் ஃபக்ரி மற்றும் பாலகிருஷ்ணன் ராஜகோபால் உள்ளிட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட சுதந்திரமான ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர்கள் அடங்கிய குழு, கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீனியர்களை அச்சுறுத்தவும், பயங்கரவாதச் சூழலை உருவாக்கி அவர்களைத் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறச் செய்யவும் பாலியல் வன்முறைகள் திட்டமிட்டு நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பின் கீழ் பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்வில் இஸ்ரேலிய பாலியல் வன்முறை ஆழமாக வேரூன்றிவிட்டது எனத் தெரிவித்ததுடன், இது மக்களை கட்டுப்படுத்துதல், அடக்குமுறை மற்றும் நிலங்களை பறித்தல் ஆகியவற்றிற்கான ஒரு கருவியாகச் செயல்படுகிறது எனவும் தெரிவித்திருக்கிறது.
பெண்கள், ஆண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பாலஸ்தீனியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையானது, “அவர்களை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குமுறை அமைப்பை நிலைநிறுத்துவதற்கும்” பயன்படுத்தப்படுகிறது என சுட்டிக்காட்டிய நிபுணர் குழு, சோதனச் சாவடிகள், சிறைச்சாலைகள், வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் இஸ்ரேலிய குடியேறிகளுடனான மோதல்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாக கூறியிருக்கிறது.
மேலும், காசாவில் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார வசதிகள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களால் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே இறப்புகளும் நோய்களும் ஏற்பட்டுள்ளது. இது பாலஸ்தீனியர்களின் எதிர்கால சந்ததி மற்றும் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் ஒரு நீண்ட காலத் திட்டமிட்ட நடவடிக்கை. இவை பாலஸ்தீனியர்களின் மறைமுக இன அழிப்புக்கு வழிவகுக்கிறது எனவும் ஐநா நிபுணர்கள் குழு எச்சரித்திருக்கிறது.
இத்தகைய செயல்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின்படி போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படலாம் என்று எச்சரித்ததுடன், பாலஸ்தீனியர்களின் உயிர்களை விட அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், சர்வதேச சமூகம் இதில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. அதேசமயம், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அனைத்து வகையான பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறது.