செய்தியாளர் - M. மீரா
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபி அரச குடும்பத்தைச் சேர்ந்த மஹ்ரா அல் நஹ்யான் (Mahrah Al Nahyan - 32) என்ற பெண், லண்டன் தெருவில் போதைப்பொருள் மயக்கத்தில் விழுந்து கிடந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அருகில் 3 வயது குழந்தை காலணிகள் இன்றி தனியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி, மேற்கு லண்டனில் உள்ள ஒரு தெருவில் மஹ்ரா அல் நஹ்யான் சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் மற்றொரு ஆணும் மயங்கிய நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அந்த மூன்று வயது குழந்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.
இதைக் கவனித்த பொதுமக்கள் குழந்தையைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொண்டதுடன், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போதைப்பொருளைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அவர் சுமார் 30 நிமிடங்கள் சுயநினைவின்றி இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு நினைவு திரும்பியபோது, அங்கிருந்தவர்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்துவதற்கான சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், சட்டவிரோத போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக மறுவாழ்வு மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, தெற்கு லண்டனில் உள்ள சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் குழந்தையை பார்க்காமல் புறக்கணித்த குற்றச்சாட்டை மஹ்ரா ஒப்புக்கொண்டார்.
அவருக்கு இரண்டு ஆண்டுகள் சமூக மறுவாழ்வுத் திட்டத்தில் பங்கேற்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், 6,114 பவுண்டுகள் அபராதமும் விதித்துள்ளது.
தனது செயலுக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.