பசிபிக்கின் நெருப்பு வளையம் ‘கம்கட்சா’.. ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கம்.. 7 ரிக்டர் பதிவு!
ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) பூமிக்கு அடியில், சுமார் 140 கிலோ மீட்டர் ஆழத்தில், 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய – மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ‘நெருப்பு வளையம்’ எனப்படும் நில அதிர்வுப் பகுதியில், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் அமைந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் தான், இந்திய நேரப்படி இன்று காலை 9.05 மணியளவில் 7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் சுமார் 140 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனவும் இதன் மையப்பகுதி கம்சட்கா தீபகற்பத்தின் தென்மேற்கே 146 கி.மீ தொலைவிலும், ஓஸெர்னோவ்ஸ்கி (Ozernovskiy) பகுதிக்கு வடகிழக்கே 80 கி.மீ தொலைவிலும் அமைந்திருந்தாக ஐரோப்பிய - மத்திய தரைக் கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதேசமயம், இந்த நிலநடுக்கத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இப்பகுதியில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், 8.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக, ஏற்பட்ட சுனாமி, கடலோர கிராமம் ஒன்றின் ஒரு பகுதியைக் கடலுக்குள் அடித்துச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் குரில் தீவுகள் பகுதியில் வரலாற்றில் இல்லாத வகையில் 9.9 ரிக்டர் அளவில் பேரழிவு நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று ஜப்பான் வானிலை மையம் (JMA) இந்திய நேரப்படி இன்று காலை 9.10 மணிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தது எனினும், இந்த எச்சரிக்கை சில நிமிடங்களிலேயே திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. அந்த எச்சரிக்கை உண்மையாக இருந்திருந்தால், அது இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்திருக்கும். வரலாற்றில் இதுவரை கருவிகள் மூலம் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், 1960-ஆம் ஆண்டு சிலி நாட்டின் வால்டிவியாவில் (Valdivia) ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே ஆகும்.

