டொனால்ட் ட்ரம்ப், H1B விசா pt web
உலகம்

H1B விசா| 24 மணி நேரத்தில் அமெரிக்கா திரும்ப அறிவுறுத்தல்... வெள்ளை மாளிகை சொல்வது என்ன ?

H1B விசாவுக்கான ஆண்டு கட்டணத்தை, 90 லட்ச ரூபாயாக உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு பணியாற்ற செல்லும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

PT WEB

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் H1B விசாவுக்கான ஆண்டு கட்டணத்தை, 90 லட்ச ரூபாயாக உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு பணியாற்ற செல்லும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடியுரிமை விதிகளை அவர் கடுமையாக்கி உள்ளார். அமெரிக்க பணிகளில், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதிலும் ட்ரம்ப் கவனம் செலுத்துகிறார்.

அந்த வகையில், அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் H1B விசாவுக்கான ஆண்டு கட்டணம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், சுமார் 90 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் வெளிநாட்டவரை பணியில் அமர்த்தியுள்ள அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் 90 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும்.

h1b visa

H1B விசாக்கள் கோரி புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், ஏற்கெனவே அந்த விசாவில் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்ற H1B விசா பணியாளர்கள் 24 மணி நேரத்துக்குள் திரும்புமாறு மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. அதற்கு பிறகு, வெளிநாடு சென்ற H1B விசாதாரர்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் H1B விசாக்கள் மூலம் சுமார் 8 லட்சம் பேர் அங்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை H1B விசா வழங்கப்பட்டவர்களில், 72 சதவீதம் பேர், அதாவது 4 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். இதற்கு அடுத்தபடியாக சீனர்கள் 11.70 சதவீதம் பேர் உள்ளனர். அமெரிக்காவில் H1B விசா 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். H1B விசா விவகாரத்தில் அமெரிக்காவின் புதிய நடவடிக்கை, இந்தியர்களை கடுமையாக பாதிக்கும் என்றே கருதப்படுகிறது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள்

இந்திய பயணத்தை ரத்து செய்யும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்!

H1B விசாவுக்கான கட்டணங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால், அங்குள்ள இந்தியர்கள் பீதியடைந்துள்ளனர். பலரும் இந்தியாவுக்கான தங்கள் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளனர். தீபாவளி மற்றும் திருமண விழாக்களுக்காக, இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்த பலரும் அவசரமாக தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர். அதேவேளையில் இந்தியாவிற்கு வந்தவர்கள் அமெரிக்கா செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ட்ரம்பின் அறிவிப்பால், அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களின் பயணக்கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விசா கட்டண உயர்வால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என இந்தியத் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

”இந்திய பிரதமர் பலவீனமானவர்” - ராகுல் காந்தி

இந்திய பிரதமர் பலவீனமானவர் என மீண்டும் தெரிவிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். H1B விசா கட்டண உயர்வை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்றும் இது நாட்டு நலன்களையும் இந்திய குடிமகன்களையும் பாதிக்கும் என்றும் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கொகோய் தெரிவித்துள்ளார். ட்ரம்புடன் மோடிக்குள்ள நட்பால் நாட்டுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டதுதான் மிச்சம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா சாடியுள்ளார்.

பிரதமர் மோடி ராகுல் காந்தி

அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயார்!

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்திய குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதை கருத்தில் கொண்டு அமெரிக்க அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று நம்புவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

திறமையான இந்திய ஊழியர்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கின்றனர் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த வலுவான மக்கள் தொடர்புகளின் பலனை அமெரிக்க அரசு கவனத்தில் கொள்ளும் என்றும் நம்பிக்கை இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தெளிவு பெறுவதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை ?

H1B விசா கட்டண உயர்வு நடவடிக்கை, புதிய விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கும், விசாவை புதுப்பிப்பவர்களுக்கும் பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளனர். H1B விசா வைத்துக்கொண்டு தற்போது வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் கவலைக்கொள்ள வேண்டாம் என்றும் கூறி உள்ளனர். இருப்பினும், பயணத்தில் உள்ளவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு அமெரிக்க நிறுவனங்கள் அறிவுறுத்தியதால், இந்தியர்கள் பீதியடைந்துள்ளனர்.