அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வுமையம் தகவல்!
வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை..
புதுக்கோட்டையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. சிவபுரம், கடையக்குடி, அரிமளம், மேட்டுப்பட்டி, முள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மழை காரணமாக அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான கோவிலூர், அரியக்குடி, இலுப்பக்குடி, கோட்டையூரில் கனமழை பெய்தது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால், ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. அருவிக்கு யாரும் செல்ல வேண்டாம் என வருவாய்த் துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழையால் செண்பகத்தோப்பு அணை மற்றும் நாக நதியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, அய்யாபட்டி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், வஞ்சி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.