புகழ்பெற்ற ‘டைம்’ இதழ் 2024-ம் ஆண்டின் முக்கிய மனிதராக (person of the year), சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப்பை தேர்வு செய்துள்ளது.
2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப், தேர்தல் முடிவுகளில் முறைகேடு செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானவர். தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியதில் ட்ரம்புக்கும் தொடர்பிருப்பதாக, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இத்துடன் ட்ரம்பின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும் இனி அவரால் ஒருபோது அதிபராக முடியாது என்றும் பேசப்பட்டன. இந்த நிலையில்தான், நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பெரும்பான்மை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடும் அரசியல் சவால்களுக்கு மத்தியில் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்பை ‘டைம்’ இதழ், இவ்வாண்டுக்கான முக்கியமான நபராக தேர்வு செய்துள்ளதுடன், அவரை நேர்காணலும் செய்துள்ளது. அந்த நேர்காணலில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றது குறித்து ட்ரம்ப் பேசியுள்ளார்.
தேர்தல் வெற்றி குறித்து ட்ரம்ப் கூறுகையில், “நாங்கள் மிகச் சிறப்பாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டோம். ஒரு நாள்கூட தவறவிடாமல், 72 நாட்கள் தொடர்ந்து பிரசாரம் செய்தோம். இந்தப் பிரசாரங்களில் நாங்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும் அது மிகப் பெரியதாக மாற்றப்படும் என்பதால், மிகக் கவனமாக இருக்க வேண்டியதிருந்தது.
இந்தப் பிரசாரத்துக்காக நான் மிகக் கடினமாக உழைத்தேன். அமெரிக்க மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதை நாங்கள் பேசினோம். ஆனால், ஜனநாயகக் கட்சியினரோ, எந்தப் பொருத்தப்பாடும் இல்லாமல், தொடர்ந்து பழைய விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தனர்.
அமெரிக்காவின் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கிறது. ஆனால், அதைவிடவும் குடியேற்ற பிரச்னை பெரியது என்று நான் நினைக்கிறேன். மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல லட்சக்கணக்கானோர், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிவருகின்றனர்.
நான் 2016-ம் ஆண்டு வெற்றிபெற்றபோது குடியேற்ற பிரச்னைக்குத் தீர்வு கண்டேன். ஆனால், ஜனநாயகக் கட்சியினரின் ஆட்சியில் மீண்டும் எல்லை திறந்துவிடப்பட்டது. மக்கள் இதை விரும்பவில்லை. மக்களின் எண்ணவோட்டத்தை தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் பிரதிபலித்ததே வெற்றிக்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.