சென்னை | புழல் மத்திய சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்பநாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை!
செய்தியாளர்: எழில்
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என மூன்று பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கஞ்சா போதைப் பொருள் கடத்தல், மோசடி என பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை நாள்தோறும் அவர்களது உறவினர்களும் வழக்கறிஞர்களும் நேரில் சந்தித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், புழல் சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை காவல் துறையினர் புழல் சிறை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பல கட்ட சோதனைகளுக்குப் பின்னரே புழல் சிறைக்குள் பார்வையாளர்கள் உட்பட அனைவரும் அனுமதிக்கப்படும் சூழலில், வெடிகுண்டுகளை கொண்டு செல்ல வாய்ப்பில்லை.
எனினும் மிரட்டலை புறந்தல்லாமல் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிரட்டல் விடுத்த செல்போன் தற்போது அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிக்னல் டவர் மூலம் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் சென்னை காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், திருச்சி மத்திய சிறையிலும் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் தமிழ்நாட்டில் மூன்று மத்திய சிறைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.