அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவன (USAID) பக்கமும் ட்ரம்பின் கவனம் சென்றுள்ளது. ஆம், ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தை வியத்தகு முறையில் குறைத்து, உலகளாவிய பணியாளர்களில் 10,000க்கும் அதிகமானவர்களில் 294 ஊழியர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள உள்ளது.
அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அதனால் செலவுகள் கூடுகிறது என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கூறிவருகிறது. அரசாங்க மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கையை, அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் எலான் மஸ்க் வழிநடத்தியுள்ளார்.
அதன்படி, ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே எலான் மஸ்க் தலைமையில் ஓர் அணி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆப்பிரிக்காவில் 12 பேர், ஆசியாவில் 8 பேர் போதும் என்று டிரம்ப் நிர்வாகம் கணக்கிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், சமீபத்திய மாதங்களில், டஜன் கணக்கான USAID ஊழியர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் நூற்றுக்கணக்கான ஒப்பந்தக்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவிர, நிர்வாகம் நேரடியாக பணியமர்த்தப்பட்ட அனைத்து USAID ஊழியர்களையும் விடுப்பில் அனுப்புவதாகவும், வெளிநாடுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை திரும்ப அழைப்பதாகவும் அறிவித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை குறித்து அனைத்துலக நிவாரண ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “இது மூர்க்கத்தனமான ஒன்று. பல மில்லியன் மக்களுக்கு உதவி செய்தவர்களை உடனடியாக ஆட்குறைப்பு செய்வது சரியானது அல்ல. இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனத்தை வழிநடத்திய முன்னாள் USAID நிர்வாகி ஜே.பிரையன் அட்வுட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அனைத்துலக நிவாரண ஊழியர்கள் அமைப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின்செயல் சட்டவிரோதமானது என்று வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் அந்த அமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது.
காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையின்படி, 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, USAID உலகளவில் 10,000க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அதன் பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்குபேர் வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அதே ஆண்டு அந்த நிறுவனம், 130 நாடுகளுக்கு, டாலர் 40 பில்லியனுக்கும் அதிகமான நிதியை வழங்கி நிர்வகித்துள்ளது. இதில் அதிகம் உதவி பெற்ற நாடுகளில் உக்ரைன், எத்தியோப்பியா, ஜோர்டான், காங்கோ ஜனநாயக குடியரசு, சோமாலியா, ஏமன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும். இந்த நாடுகளில் பல அமெரிக்க உதவியை பெரிதும் நம்பியுள்ளன. இது நிறுவனத்தின் வியத்தகு ஆட்குறைப்பின் உலகளாவிய தாக்கம் குறித்த கவலைகளை எழுப்புகிறது.