குடியுரிமை விவகாரம் - அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் காலவரையின்றி தடை!
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதல் பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அதில், அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையும் ரத்து செய்யப்பட்டது. ’அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டின் குடியுரிமை பெற, அவர்களின் பெற்றோர் ஒருவராவது அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்’ என்பதே அவரது உத்தரவாக இருக்கிறது. அதாவது, 1868-இல் இயற்றப்பட்ட சட்டவிதியின்படி, பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலையைப் பொருட்படுத்தாமல், அமெரிக்காவில் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் உத்தரவை டொனால்டு ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
இது, பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு, அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்காலிக வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்களில் அமெரிக்கா சென்று வசித்துவரும் இந்தியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை என்பது கிடைக்காது.
அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதைத் தொடர்ந்து ட்ரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் சியாட்டில் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதி, ”அரசியலமைப்புடன் ட்ரம்ப் கொள்கை விளையாட்டுகளை விளையாடுகிறார். தனிப்பட்ட நலனுக்காக சட்டத்தின் ஆட்சியைத் அவர் மதிப்பிழக்கச் செய்ய முயல்கிறார்” எனக் கண்டித்த நீதிபதி, ட்ரம்பின் உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து உத்தரவிட்டார்.
முன்னதாக மேரிலாந்து நீதிமன்றமும் இதே தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு அமெரிக்காவில் விசா பெற்று கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.