”ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலைக்கு விலை கொடுக்க நேரிடும்" என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஈரானும் பதிலுக்குத் தாக்கத் தொடங்கியது. இதனால், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. தவிர, தாக்குதல் மேலும் தீவிரமடையும் எனவும், நீண்ட நாட்கள் தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ஈரானை அழிப்பதே அமெரிக்காவின் வேலை என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஈரானுக்கு இனி ஒரு செயல்பாட்டு ராணுவம் அல்லது அதிகாரத்தில் மீதமுள்ள எந்த தலைமையும் இல்லாதபோதுதான் போர் முடிவடையும். ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நான் ஈடுபட விரும்புகிறேன்.நாங்கள் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு மோதலில் ஈடுபடவிரும்பவில்லை. அமெரிக்காவை ஒரு போருக்கு இட்டுச் செல்லாத ஒரு ஈரான் அதிபரை தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ட்ரம்புவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி சபதம் செய்துள்ளார். இவர், கமேனியின் உயர் ஆலோசகராக பணியாற்றியவர் ஆவார். அவர், "எங்கள் தலைவரின் இரத்தத்திற்கு தெஹ்ரான் பழிவாங்கும். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கொலைக்கு விலை கொடுக்க நேரிடும். ட்ரம்ப் செய்ததற்கு நாங்கள் பதிலடி கொடுக்கும்வரை அவரைத் தனியாக விடமாட்டோம். எங்களின் எதிர்வினையை ட்ரம்ப் தவறாக மதிப்பிட்டு விட்டார். இந்த மோதல், விரைவாக முடிவடையாது. வெனிசுலாவில் செய்ததை இங்கேயும் செய்ய முடியும் என்று ட்ரம்ப் எண்ணுகிறார். இப்போது அவர் சிக்கிக்கொண்டு இருக்கிறார். நாங்கள் அவரை விடமாட்டோம். எங்கள் தலைவரை மட்டுமல்லாது 1000க்கும் மேற்பட்டோரையும் கொன்றுள்ளார். இது ஒரு எளிதான விஷயம் அல்ல” என அவர் எச்சரித்துள்ளார்.
முதலில் ஈரான் அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், அதே கருத்தை தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார். அலி லாரிஜனியின் மிரட்டல் குறித்து பதிலளித்த ட்ரம்ப், “அவர் என்ன பேசுகிறார்? யார் அவர் என்று எனக்குத் தெரியவில்லை. அதுகுறித்து நான் கவலைப்படப் போவதும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.