world news x page
உலகம்

Top 10 உலகம் | இம்ரான் கான் மனைவிக்கு கிடைத்த ஜாமீன் முதல் திவால் நிலையிலிருந்து மீண்ட இலங்கை வரை!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. இம்ரான் கான் மனைவிக்கு ஜாமீன்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி மீது பாதுகாப்புப் படையினரை கார் ஏற்றி கொலை செய்தது உட்பட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பல்வேறு வழக்குகளின்கீழ் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, கடந்த மாதம் 26ஆம் தேதி அவரது கட்சி ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான்கான் மனைவியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த வன்முறையில், பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் கார் ஏற்றிக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இம்ரான் கான் மனைவி புஷ்ரா பிபீ மீது 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், அவருக்கு ஜனவரி 13ஆம் தேதி வரையில் பிணை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கான்

2. ஜெர்மனி கார் விபத்தில் 7 இந்தியர்கள் பலி!

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் புகுந்த விபத்தில் 7 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை உறுதிசெய்துள்ள மத்திய வெளியுறவுத்துறை, பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியில் மக்டக்பெர்க் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்ட சந்தைக்குள் வேகமாக வந்த கார் ஒன்று புகுந்தது. அங்கிருந்தவர்களை இடித்து தள்ளிச் சென்ற காரில் சிக்கி குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

3. வாட்ஸ் அப் கணக்குகள் ஹேக்: இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு!

அமெரிக்காவில் குறிப்பிட்ட நபர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேலின் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில், இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனத்தின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் கணக்கு வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட தரவுகள் பெகாசஸ் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

4. திவால் நிலையிலிருந்து மீண்ட இலங்கை

திவால் நிலையிலிருந்து இலங்கை அதிகாரப்பூர்வமாக மீண்டுவிட்டதாக அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்ட கடன் மதிப்பீட்டு நிறுவனமானஃபிட்ச் ரேட்டிங்ஸ், இலங்கையின் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ள நிலையில், இலங்கை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுவந்த இலங்கை, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திவால் நிலைக்கு உள்ளானது. மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பியோடி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்று, திவால் நிலையிருந்த நாட்டை மீட்க, சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளிடம் நிதி உதவி கோரினார். ஐஎம்எஃப் நிதி உதவி வழங்கத் தொடங்கியதன் நீட்சியாக, இலங்கையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர குமார திசாநாயக, மேலும் சில சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டார்.

5. சூரிய ஒளிவட்டம் என்ற அரிய வகை நிகழ்வு

சீனாவில் உள்ள கிராமம் ஒன்றில் சூரிய ஒளிவட்டம் என்ற அரிய வகை நிகழ்வு ஏற்பட்டது. மோஹே நகரின் அருகே உள்ள பெய்ஜி என்ற கிராமம், சீனாவின் வட துருவம் என்ற அழைக்கப்படுகிறது. குளிர்கால சீசனில் சுமார் 17 மணி நேரத்திற்கு சூரிய ஒளியே படாத இந்த பகுதியில், சூரிய ஒளிவட்டம் ஏற்பட்டது. வானில் தோன்றிய இந்த அதிசய நிகழ்வை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். சூரியனின் கதிர்கள், வளிமண்டலத்தில் படர்ந்துள்ள பனித் துகள்கள் மீது படும்போது இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.

6. இலங்கை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை!

இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சில உணவகங்கள் மிகவும் அசுத்தமாக இருந்ததுடன், சமையல் செய்யும் இடங்களில் எலிகளின் கழிவுகள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் சில உணவகங்களில் சமையல் செய்யும் இடங்களில் பூனைகள் இருந்தன. இந்த கடைகளுக்கு அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், சுகாதாரமற்ற முறையில் உணவு சமைத்த உணவகங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் உணவகங்களில் இருந்த உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் கேன்களை அகற்றவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

7. ‘டைம்’ இதழில் இடம்பிடித்த AMD நிறுவன சிஇஓ

உலகப் புகழ்பெற்ற ‘டைம்’ இதழ் 2024-ம் ஆண்டுக்கான சிறந்த தலைமை செயல் அதிகாரியாக, AMD நிறுவனத்தின் சிஇஓ லிசா சு-வை தேர்ந்தெடுத்துள்ளது. சிப் துறையில் Intel நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி AMD-ஐ உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக மாற்றி இருக்கிறார் லிசா சு. ஒவ்வொரு ஆண்டும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து, இன்டெலின் ஆதிக்கத்துக்கு சவால் விட ஆரம்பித்தது லிசா சு தலைமையிலான ஏஎம்டி. 2022-ம் ஆண்டு, இன்டெலைவிடவும் அதிக சந்தை மதிப்புகொண்ட நிறுவனமாக உருவெடுத்து ஏஎம்டி வரலாறு படைத்தது. இன்று இன்டெலின் சந்தை மதிப்பு 88 பில்லியன் டாலர். ஏஎம்டியின் மதிப்போ 200 பில்லியன் டாலர்.

8. ஏமனில் ஹவுதி அமைப்பினர் மீது அமெரிக்கா தாக்குதல்

ஏமனில் ஹவுதி அமைப்பினரின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் சனாவில் உள்ள ஹவுதி அமைப்பினரின் ஆயுத கிடங்குகள், கட்டுப்பாடு மையங்கள் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஏமன் அரசு தகவல்களை வெளியிடவில்லை. செங்கடலிலில் பயணிக்கும் கப்பல் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திவருவதற்கு பதிலடி என அமெரிக்கா பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. மேலும் தாக்குதல் தொடர்பான வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஹொடெய்டா நகரங்கள் மீது ராக்கெட், ஏவுகணைகளை வீசி ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 16 பேர் காயமடைந்தனர்.

9. ஸ்பெயினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உற்சாகமூட்டும் நிகழ்வு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினின் வலென்சியாவில் மக்களை உற்சாகமூட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பப்போராட்டா நகரில் தன்னார்வலர்கள் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்திருந்த நபர், பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி உற்சாகமூட்டினார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வலென்சியா நகரில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி 220 பேர் உயிரிழந்தனர். பலர் தங்களது உடமைகளை இழந்து கடுமையான பாதிப்பை எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

10. ஆண்டு முழுவதும் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்தநாள் கொண்டாட்டம்

இரண்டாம் உலகப் போரின் நாயகனாக கருதப்படும் வின்ஸ்டன் சர்ச்சிலின் 150ஆவது பிறந்தநாள் பிரிட்டனில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 26 வயதில் முதன்முதலாக பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த சர்ச்சில், 1914முதல் 1918ஆம் ஆண்டு வரை நடந்த முதல் உலகப் போரின்போது தனது போர் வியூகத்தாலும், வசீகரிக்கும் பேச்சாலும் கவனம் பெற்றார். அரசியலின் நுணுக்கங்களை அறிந்த அவர், உலகம் ஓர் இருண்ட காலத்தில் சிக்கி அல்லாடியபோது, பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்றார். சர்ச்சில் தமது காலத்தில் வெளிப்படுத்திய பேச்சுகள், எழுத்துகளில் சில கூற்றுகள் காலம் கடந்தும் மேற்கோள்களாக நினைவுகூரப்படுகின்றன. அரசியலராக, சிறந்த பேச்சாளராக திகழ்ந்தாலும் சர்ச்சிலுக்கு எழுத்தாளர் என்ற மற்றொரு பக்கமும் உண்டு. இரண்டாம் உலகப் போரை பற்றிய அவரது நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.