2015 ஆம் ஆண்டு உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் சாம் ஆல்ட்மேனுடன் இணைந்து OpenAI என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஏஐ துறையில் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் நோக்கிலும், பாதுகாப்பான ஏஐ-யை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. நிறுவனத்தின் தொடக்கக் காலத்தில் 3 . 8 கோடி டாலர் முதலீடு செய்திருந்தார் எலான் மஸ்க் .
அதன்பிறகு, ஓபன் ஏஐ நிறுவனம் ஆல்ட்மேன் கட்டுப்பாட்டில் வந்தது. எலான் மஸ்க் கடந்த 2018 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ அறக்கட்டளையில் இருந்து வெளியேறினார். முதலாளித்துவ நிறுவனமாக OpenAI நிறுவனம் மாறிவிட்டதால், சுமார் 130 பில்லியன் டாலர் வரை நஷ்டஈடு கேட்டு ஆலட்மேனுக்கு எதிராக எலான் மஸ்க் வழக்கு தொடர்ந்தார்.
லாப நோக்கமற்ற அமைப்பாக தொடங்கப்பட்ட ஓப்பன் ஏஐ, தற்போது 85 ஆயிரத்து 200 கோடி டாலர் மதிப்புள்ள வணிக நிறுவனமாக மாறியதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது . ஆல்ட்மேன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் எலான் மஸ்க்.
OpenAI-யின் தலைமைச் செயல் அதிகாரியான ஆல்ட்மேன் மற்றும் அவரது முதன்மை உதவியாளரும் இணை நிறுவனருமான கிரெக் ப்ராக்மேன் ஆகியோர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் எலான் மஸ்க் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு அமெரிக்காவின் ஓக்லாந்தில் உள்ள மத்திய நடுவர் மன்றத்தில் 4 வாரத்திற்கு விசாரிக்கப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்துக்கு ஆபத்தாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். உலகின் முதல் ட்ரில்லியனராக மஸ்க் உருவெடுக்க உள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஏஐ துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.