four indian cardinals x page
உலகம்

புதிய போப்-க்கான போட்டியாளர்கள் யார் யார்.. தேர்வு செய்யும் கார்டினல்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்!

போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன.

Prakash J

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுருவாக இருந்த போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஏப்.21) காலமானார். அவருடைய மறைவு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்கிடையே போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. அதாவது, போப் ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, புதிய போப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன.

போப் பிரான்சிஸ்

அந்த வகையில், புதிய போப்பாகத் தேர்வாகும் வாய்ப்பில் இருப்பவர்கள் யார்யார் என்கிற விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரான்ஸைச் சேர்ந்த ஜீன்-மார்க் அவெலின் (66), ஹங்கேரியைச் சேர்ந்த பீட்டர் எர்டோ (72), மால்டாவின் மரியோ கிரெச் (68), ஸ்பெயினைச் சேர்ந்த ஜுவான் ஜோஸ் ஓமெல்லா (79), இத்தாலியைச் சேர்ந்த பியட்ரோ பரோலின் (70), பிலிப்பைன்ஸைச் சேர்ந்த லூயிஸ் டேகிள் (67), அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் டோபின் (72). உக்ரைனைச் சேர்ந்த மைக்கோலா பைச்சோக் (45) ஆகியோர் போட்டியாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதிய போப் தேர்வில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி ஓட்டு போடுவர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஓட்டு காகிதங்கள் எரிக்கப்படும். கருப்பு புகை வந்தால் – போப் தேர்வு இல்லை. வெள்ளை புகை வந்தால் – புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்படியே புதிய போப் தேர்வு செய்யப்படுவார். 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

four indian cardinals

ஓட்டளிக்கும் தகுதியான கார்டினல்கள் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 136 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவின் 4 கார்டினல்களும் இடம்பெறுகின்றனர். கோவா, டாமன் பேராயரும் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பு தலைவருமான பிலிப் நேரி பெராவ் (72), கேரள திருவனந்தபுரம் சைரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபை பேராயரான பசேலியாஸ் கிளிமீஸ், ஹைதராபாத் பேராயரான ஆண்டணி போலா (63), இந்தியாவின் மிக இளம்வயது கார்டினலான ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (51) ஆகியோர் உள்ளனர்.