போப் பிரான்சிஸ் மரணம் | அடுத்த போப் தேர்வு செய்வது எப்படி?
செய்தியாளர் - ந.பாலவெற்றிவேல்
காலமானார் போப் பிரான்சிஸ்!!
கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுருவாக இருந்த போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப். 14-ஆம் தேதி, ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதனையில், போப் பிரான்சிஸுக்கு 2 நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. 38 நாள்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து போப் பிரான்சிஸ் வாடிகனுக்குத் திரும்பினாா். அவருக்கு 2 மாதங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இந்த ஓய்வுகாலத்தில் திரளாக மக்களைச் சந்திப்பதையோ அல்லது கடும் உழைப்பு தேவைப்படும் அலுவல்களில் ஈடுபடுவதையோ தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே, ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கத்தோலிக்க போப் பிரான்சிஸ் காலமானார். போப் பிரான்சிஸ் மறைவு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தென் அமெரிக்காவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு ஆசி வழங்கியிருந்தார் போப் பிரான்சிஸ். 2013 மார்ச் 13இல் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் சுமார் 12 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகித்தார். போர்களை முடிவுக்கு கொண்டுவந்து உலகில் அமைதி நிலவ வேண்டும் என வலியுறுத்தியவர் போப் பிரான்சிஸ்
அடுத்த போப் தேர்வு செய்வது எப்படி?
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் மறைவையடுத்து, அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. அதாவது, போப் ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது தனது பதவியை ராஜினாமா செய்தாலோ, புதிய போப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். அந்த வகையில், எல்லா கார்டினல்களும் (Cardinals) வாடிகனில் கூடி செயின்ட் பீட்டர்ஸ் பாசிலிக்கா அருகே உள்ள சிஸ்டின் சேப்பல் (Sistine Chapel) என்பதில் கலந்தாய்வு நடத்துவர்.
80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு நாளும் 4 முறை (2 முறை காலை, 2 முறை மாலை) வாக்குப்பதிவு நடைபெறும். ஒரு நபர் போப்பாக தேர்வு செய்யப்பட, அவருக்கு குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஓட்டு காகிதங்கள் எரிக்கப்படும். கருப்பு புகை வந்தால் – போப் தேர்வு இல்லை. வெள்ளை புகை வந்தால் – புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்படியே புதிய போப் தேர்வு செய்யப்படுவார்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:
“திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரமான தருணத்தில், உலக கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள லட்ச கணக்கான மக்களால், இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
சிறு வயதிலிருந்தே, அவர் ஆண்டவர் கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்ககு,அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.
அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய சாந்தியைக் காணட்டும்” என்று தனது இரங்கல் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.