Kobe Pt web
உலகம்

சாக்கடை அமைக்க தோண்டிய குழி.. மாணவருக்கு கிடைத்த ரூ.99 கோடி புதையல்.. காவல்துறை விடுத்த எச்சரிக்கை!!

பெல்ஜியம் நாட்டில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக பழைய கட்டடம் ஒன்றில், பள்ளம் தோண்டிய 18 வயது மாணவருக்கும் சுமார் 9 மில்லியன் யூரோ. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 99 ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Premkumar S

பெல்ஜியத்தின் சின்ட்-கில்லிஸ்-டெண்டர்மாண்டே (Sint-Gillis-Dendermonde) பகுதியில் உள்ள ஒரு பழைய மதுபான ஆலை வளாகத்தில் சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கோபி (Kobe) என்ற 18 வயது மாணவரும், அவருடன் பணியாற்றியவர்களும் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு சில நாணயங்கள் இருப்பதை கோபி கவனித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது குழுவினரிடம் தெரிவித்த நிலையில், முதலில் அவை சாதாரண 1 யூரோ நாணயங்கள் என்று நினைத்துள்ளனர். ஆனால் தொடர்ந்து தோண்டியபோது தங்கக் கட்டி ஒன்று கிடைத்ததால், தாங்கள் கண்டுபிடித்தது மிகப்பெரிய புதையல் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

புதையல்

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், அந்த இடத்தில் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் எண்ணிடப்பட்ட தங்க பார்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு, சுமார் 99 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், இந்தப் புதையல் சாதாரணமாக மண்ணுக்கு அடியில் கிடைக்கவில்லை எனவும், பழைய கட்டிடத்தின் அடித்தளச் சுவருக்குள், ஒரு பையில் வைத்து செங்கற்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

புதையல் கிடைத்தவுடன் மாணவர்களும் பணியாளர்களும் அதை தங்களிடம் வைத்துக்கொள்ளாமல் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது தங்கம் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு, அதன் உரிமையாளர் யார், எப்போது அது அங்கு மறைத்து வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த புதையல் பழைய மதுபான ஆலை உரிமையாளரான தியோபிலஸ் வான் ஆஷ் (Theophilus Van Assche) குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை அதன் உண்மையான உரிமையாளர் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே, புதையல் கிடைத்த இடத்துக்கு பொதுமக்கள் சென்று மேலும் தங்கத்தைத் தேட வேண்டாம் என பெல்ஜியம் காவல்துறை எச்சரித்துள்ளது.