குழந்தை திருமணம் எக்ஸ் தளம்
உலகம்

’சார் எனக்கு கல்யாணம்’ | விடுமுறையுடன் ஊதியம்பெற ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த வங்கி ஊழியர்!

தைவான் நாட்டில் அரசின் விதிகளை சாதுர்யமாக பயன்படுத்தி, வங்கி ஊழியர் ஒருவர், ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார்.

Prakash J

ஒவ்வொரு நாட்டிலும் அதன் அரசு சட்டப்படி பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் கிழக்கு ஆசியாவில் தென், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தீவு நகரமான தைவானில், ஒரு நபருக்கு திருமணத்தின்போது 8 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க சட்டம் இடம் தருகிறது. இதைப் பயன்படுத்தி வங்கி ஊழியர் ஒருவர் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 32 நாட்கள் தொடர் விடுமுறை எடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

பெயர் குறிப்பிடப்படாத அந்த வங்கி எழுத்தர், முதல் முறையாக ஏப்ரல் 6, 2020 அன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர், அந்த விடுமுறை முடிந்த பிறகு, அவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அதாவது, கூடுதல் விடுப்பு கோர மறுநாளே அவளை மறுமணம் செய்துகொண்டுள்ளார். இதை அவர் திரும்பத் திரும்பச் செய்துள்ளார். மொத்தத்தில் அந்தப் பெண்ணை அவர் 4 முறை விவாகரத்தும் செய்துள்ளார். இதன்மூலம் 32 நாட்கள் விடுமுறையுடன் ஊதியமும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து, எழுத்தரின் செயல்களில் சந்தேகம் கொண்ட வங்கி, சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, அடுத்தடுத்த திருமணங்களுக்கு விடுப்பு வழங்க மறுத்துவிட்டது. இதற்காக தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து ஊழியர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அக்டோபர் 2020இல், தொழிலாளர் பணியகம் எழுத்தருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. வங்கி சட்டத்தை மீறியதாகக் கூறி நிறுவனத்திற்கு தோராயமாக ரூ.50,000 அபராதம் விதித்தது. எழுத்தர் அமைப்பை தெளிவாகக் கையாண்டதாகக் கூறி வங்கி மேல்முறையீடு செய்தது.

திருமணம்

இருப்பினும், ஏப்ரல் 10, 2021 அன்று, தொழிலாளர் பணியகம் அதன் ஆரம்ப முடிவை உறுதி செய்தது. எழுத்தரின் நடவடிக்கைகள் நெறிமுறை ரீதியாக கேள்விக்குரியவை. ஆனால் சட்டப்பூர்வமாக அனுமதிக்கத்தக்கவை என்பதை ஒப்புக்கொண்டது. இந்த தகவல் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, சிலர் எழுத்தரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினாலும், மற்றவர்கள் அவரது சந்தர்ப்பவாத செயலைக் கண்டித்தனர். இதற்கிடையே இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தைவானின் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.