இந்தியாவின் அதானி குழுமம், உலகம் முழுவதும் தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்திவருகிறது. அந்த வகையில், இலங்கையிலும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்துவரும் பணியிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.
இதுதவிர, மன்னார் பூனேரி காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளது. இந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் 20 ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசின்போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன்மூலம், 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, இலங்கை அரசு அதானி குழுமத்துடனான மின் உற்பத்தி திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. அதிபர் அனுர குமார திச நாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை, இந்த திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளது. முன்னதாக, இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் குறைபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தவிர, கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அனுர குமார திசநாயக்க “இந்த திட்டத்தை ரத்து செய்வேன்” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகு எதிர்க்கட்சியினர் பலரும் இதுதொடர்பாக கண்டங்களைப் பதிவு செய்ததுடன் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். முன்னதாக, “மின் ஆற்றல் துறையில் அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்திக் கட்சி எம்.பி. அஜித் பி.பெரேரா வலியுறுத்தியிருந்தார்.
மறுபுறம், இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. என்றாலும், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகத்தான் இலங்கை அரசு அதானி ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.