வேகமெடுக்கும் அதானி வழக்கு.. அதிரடி காட்டிய அமெரிக்க நீதிமன்றம்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தது.
எனினும், இன்றுவரை அதானி குறித்த விவகாரங்கள் பேசுபொருளாகவே உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்தது. இந்த லஞ்சம் 2020 முதல் 2024 வரை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சூரிய சக்தி திட்டத்திற்காக அதானி குழுமம் பில்லியன்களை திரட்டிய அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதன்மூலம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அதானி குழுமத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக, அதானி தனிப்பட்ட முறையில் சந்தித்து, லஞ்சம் தருவது தொடர்பாகப் பேசியதாகவும், அதேபோல், அதிகாரிகளுடன் சாகர் அதானி தொலைபேசியில் பேசியதாகவும் அதற்கான ஆதாரங்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்ற வழக்கு தொடுத்துள்ள நிலையில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் தரப்பில் இரண்டு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இவை அனைத்தையும் ஒரே நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதித்துறை செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், மூன்று வழக்குகள் வெவ்வேறு அமர்வில் விசாரிக்கப்படும் பட்சத்தில் விசாரணை தேதிகளில் முரண்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரிப்பார் என்றும் அனைத்து வழக்குகளும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.