”அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்”.. இலங்கையில் கிளம்பும் எதிர்ப்பு!
இந்தியாவின் அதானி குழுமம் உலகம் முழுவதும் தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்திவருகிறது. அந்த வகையில், இலங்கையிலும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் புதிய முனையம் அமைத்துவரும் பணியிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்திலும் அதானி கையெழுத்திட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் 20 ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலம், 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின் ஆற்றல் துறையில் அதானி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்திக் கட்சி வலியுறுத்தி உள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அக்கட்சி எம்.பி. அஜித் பி.பெரேரா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வு இலங்கையின் ஏற்றுமதியைக் கடுமையாக பாதித்துள்ளது. மின்சக்தி, எரிபொருள் மற்றும் எரிவாயுவை நிவாரண விலையில் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த அதிபர் அனுர குமார திசநாயக, ஆட்சிக்கு வந்தபிறகு அதுதொடர்பான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
எதிர்க்கட்சியில் இருந்தபோது அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை எதிர்த்த அனுரகுமார, அதிபராகி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுவந்த பிறகு அதானி உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்யத் தயங்குகிறார்” என அவர் தெரிவித்துள்ளார்.