Elon Musk  X
உலகம்

உலகின் முதல் டிரில்லியனரான மஸ்க்.. விண்ணை முட்டும் Space X பங்குகள்.. பின்னணி என்ன?

SpaceX நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 20% வரை உயர்ந்ததால், எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு டிரில்லியன் டாலரை கடந்திருக்கிறது.

PT WEB

எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான SpaceX Nasdaq அமெரிக்க பங்குச்சந்தையில் தனது பொதுப் பங்கு வெளியீட்டை IPO வெற்றிகரமாகத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

Space x

SpaceX நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 20% வரை உயர்ந்ததால், எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு டிரில்லியன் டாலரை கடந்தது. இந்த IPO-வில் ஒரு பங்கின் விலை 135 டாலராக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வர்த்தகத் தொடக்கத்தில் அது 162 டாலராக உயர்ந்தது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு $2 டிரில்லியன் டாலரை (சுமார் ₹167 லட்சம் கோடி) தாண்டியுள்ளது.

கடந்த சில மாதங்களில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வெறும் ராக்கெட் ஏவும் நிறுவனமாக இல்லாமல், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஏஐ (AI) உள்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஜாம்பவானாக உருவெடுத்ததே இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம்.

அமெரிக்க பங்குச்சந்தையான Nasdaq-இல் SPCX என்ற குறியீட்டுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இது உலக நிதி வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ (IPO) ஆகும்.

Elon musk

இந்த ஐபிஓ மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சுமார் $75 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது. இது 2019 ஆம் ஆண்டு சவுதி அராம்கோ (Saudi Aramco) படைத்த சாதனையை முறியடித்துள்ளது.

உலகளவில் இந்த பங்குகளுக்கு அசுர வரவேற்பு இருந்தது. முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் $350 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.