ஜூபீன் கார்க் insta
உலகம்

அசாம் பாடகர் மர்ம மரண வழக்கு.. சிங்கப்பூர் காவல் துறை சொன்ன பதில் என்ன?

அசாம் பாடகர் ஜூபீன் கார்க் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Prakash J

அசாம் பாடகர் ஜூபீன் கார்க் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அஸாமி மட்டுமின்றி, வங்கம், இந்தி மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் ஜூபீன் கார்க். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக அறியப்பட்ட ஜூபீன் கார்க், நேரடி இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்திவந்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, அவர் அங்குச் சென்றிருந்தபோது, நீச்சல் குள விபத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவரது மரணத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இங்கும் இரண்டாவது முறை உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது திடீர் மரணம் ரசிர்களுக்கும், அசாம் மாநிலத்திற்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருடைய மரணத்தில் மர்மம் நீடிப்பதால், மாநில அரசு ஐபிஎஸ் அதிகாரி எம்.பி.குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூபீன் கார்க்

இந்த விவகாரத்தில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி, வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் இணைப் பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா, பாடகர் கார்க்கின் உறவினரும் காவல்துறை அதிகாரியுமான சந்தீபன் கார்க் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். மேலும், இந்த வழக்கில் மர்மம் நீடிப்பதால், சிங்கப்பூர் அதிகாரிகளின் உதவியை நாட அசாம் மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், சிங்கப்பூரின் மரண விசாரணைச் சட்டத்தின்படி, பாடகர் ஜூபீன் கார்க் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை எந்த தவறும் நடந்ததாக சந்தேகிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ”இந்த வழக்கில் முழுமையான மற்றும் தொழில்முறை விசாரணையை நடத்த SPF உறுதிபூண்டுள்ளது, இதற்கு நேரம் எடுக்கும். சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுமையையும் புரிதலையும் நாங்கள் கோருகிறோம்.

இதற்கிடையில், சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிக்கவும் பரப்பவும் வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று அது தெரிவித்துள்ளது. மூன்று மாதங்கள் ஆகக்கூடிய விசாரணையின் முடிவில், ஆய்வுகள் சிங்கப்பூரில் உள்ள மாநில மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், பின்னர் அதுகுறித்து வெளியிடப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, பிரேதப் பரிசோதனையின் நகலை இந்தியாவிற்கு அனுப்பியதாகவும், முதற்கட்ட விசாரணைகளை அக்டோபர் ஆம் தேதி அனுப்பியதாகவும் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.