இஸ்ரேல் - ரஷ்யா Reuters
உலகம்

”இஸ்ரேல் நாடே இல்லாமல் போகக்கூடும்..” - எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்கள் மேலும் விரிவடைந்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகக்கூடும் எனவும் ஈரான் அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடையக்கூடும் எனவும் ரஷ்யாவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

Premkumar S

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் தொடங்கிய மோதல் தற்போது 6 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே பல முறை போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேபோல, லெபனானில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல், சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல் என மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளிலும் பதற்றம் நீடித்து வருகிறது.

அப்தி அலாவுதினோவ்

இந்தச்சூழலில் தான், ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரியும், அக்மத் சிறப்புப் படையின் (Akhmat special forces unit) தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் அப்தி அலாவுதினோவ் (Apti Alaudinov) இஸ்ரேல் குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.

ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய அலாவுதினோவ், மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் மோதலை மேலும் விரிவுபடுத்தி, அமெரிக்கா மற்றும் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டணியையும் இதில் ஈடுபடுத்துவதே இஸ்ரேலின் நோக்கம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேசமயம், இந்த மோதலை விரிவுபடுத்தும் முயற்சி, இஸ்ரேலுக்கே எதிராக திரும்பக்கூடும் என்றும், தனது பலத்தை இஸ்ரேல் மிகையாக மதிப்பிட்டால், இறுதியில் இஸ்ரேல் ஒரு நாடாகவே இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரானுடன் பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும். ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடரும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் குறித்து ரஷ்யாவின் ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.