அமெரிக்கா - ஈரான் போர்| டிரம்பின் அடுத்த அதிரடி அறிவிப்பு.. உலக நாடுகளுக்கு பகீர் எச்சரிக்கை!
அமெரிக்கா–ஈரான் இடையேயான ஹார்முஸ் நீரிணை பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், டொனால்ட் ட்ரம்ப் ஈரானை முழுமையாக தனிமைப்படுத்தும் வகையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரப் போரை அறிவித்துள்ளார். ஈரானுக்கு உதவும் எந்த நாட்டின் வங்கிகள், வணிகங்கள், எண்ணெய் கடத்தல், நாணயப் பரிமாற்றம், கப்பல் பதிவு போன்ற அனைத்துக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
‘இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு’ என்று தோன்றும் வகையில் தான் நாளுக்கு நாள் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மோதல் இருந்துவருகிறது. ஹார்முஸ் நீரிணை மீதான அதிகார நிலைநிறுத்தலுக்காக இரண்டு நாடுகளும் கடுமையாக போட்டிப்போட்டு வருகின்றன. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துவரும் நிலையில், மீண்டும் இருநாடுகளும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
ஒருபக்கம் ஹார்முஸ் நீரிணை திறந்துதான் இருக்கிறது என்றும், அதை அமெரிக்காவின் ஒரு அங்கமாக அறிவிக்கிறேன் என்றும் ட்ரம்ப் கூற, மறுபக்கம் தங்களுடைய நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்காதவரை ஹார்முஸ் நீரிணை மூடியே தான் இருக்கும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் ஈரானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், ஈரானை தனிமைப்படுத்திவிடும் ஒரு அதிரடி அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இது முன்னெப்போதும் இல்லாதவகையிலான பொருளாதார பேரழிவாக இருக்கும் என உலகின் மற்றநாடுகளை எச்சரிக்கும் வகையில் அந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள என்னை விடச் சிறந்த வாய்ப்பை வேறு யாரும் வழங்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். இதனால் இதுவரை எந்தவொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்படாத மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை நான் அறிவிக்கிறேன். இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போராகவும், தனிமைப்படுத்தலாகவும் அமையும். ஈரானின் கடற்படை செயலிழந்துவிட்டது, விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டது. ராணுவத் தொழிற்சாலைகள் தரைமட்டமாகிவிட்டன. அவர்களின் நாணயம் மதிப்பற்றதாகிவிட்டது. மொத்தமாக அந்த நாடே மிக மோசமான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தசூழலில் ஈரானுக்கு உதவிகளை வழங்கும் வகையில் மற்ற நாடுகள், தங்கள் நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மூலம் எந்த வகையிலாவது உதவிகளை வழங்கினால் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அந்நாட்டின் தொடர்புடைய எண்ணெய் கடத்தல், நாணயப் பரிமாற்ற ஏற்பாடுகள், பணப் பரிமாற்றங்கள், கப்பல் பதிவு சேவைகள் மற்றும் பினாமி நிறுவனங்கள் என அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும். இது ஒரு பொருளாதாரப் பேரழிவு நாளாக இருக்கும். ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்கவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் அமெரிக்காவுடன் எங்கள் நட்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இந்த வெறிபிடித்தவர்கள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளனர், இந்த நடவடிக்கைகள் அவர்களை முடக்குவதுடன், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைப் பரப்பும் அவர்களின் திறனையும் அழித்துவிடும். இனி ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது” என கடுமையான அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இப்படி ட்ரம்ப் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதாக அச்சுறுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஈரானின் எண்ணெய், கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித் துறைகள் மீது கடுமையான தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஈரானிய துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகையை விதித்ததோடு, ஈரான் தனது எண்ணெயை வெளிநாடுகளுக்கு விற்க உதவுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள், தரகர்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்களையும் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

