வரலாறு காணாத கடன்சுமையில் அமெரிக்கா? கருவூலத்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!
அமெரிக்க கருவூலத் துறை (Treasury Department) சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, அந்நாட்டின் மொத்த தேசியக் கடன் 40 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.3,800 லட்சம் கோடி ஆகும்.
கடந்த 2017-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபோது, அந்நாட்டின் தேசியக் கடன் சுமார் 19.95 டிரில்லியன் டாலராக இருந்தது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் கடன் சுமை 40.05 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. அதாவது, ட்ரம்ப் முதன்முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற காலத்துடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவின் தேசியக் கடன் இருமடங்குக்கும் அதிகமாகும்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் கடன் விகிதம் கணிசமாக அதிகரித்து வருவது அந்நாட்டு பொருளாதாரத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2025 ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் தேசியக்கடன் 38 டிரில்லியன் டாலரை எட்டிய நிலையில், 2026 மார்ச் மாதத்தில் 39 டிரில்லியனை எட்டியிருந்தது. இந்தசூழலில் தான், அடுத்த 5 மாதத்தில் 40 டிரில்லியனை எட்டியிருக்கிறது. இதில், 38.26 டிரில்லியன் டாலர் பொதுக்கடனாவும், 7.78 டிரில்லியன் டாலர் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் கூறப்படுகிறது.
இந்த கடன் உயர்வுக்கு முக்கிய காரணம், அமெரிக்க அரசின் வருவாயை விட செலவு தொடர்ந்து அதிகமாக இருப்பதுதான் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், ராணுவ செலவுகள் மற்றும் மருத்துவம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்து வருவதும் முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இந்த டிரில்லியன் டாலர் க்கடன் சுமையானது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தோராயமாக 1 லட்சத்து 17 ஆயிரம் டாலர் கடன் இருப்பதற்கு சமமாகும்.
இதற்கிடையில், 2026 நிதியாண்டில் அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை சுமார் 2.1 டிரில்லியன் டாலரை எட்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் பட்ஜெட் அலுவலகம் (Congressional Budget Office) கணித்துள்ளது. மேலும், இதே போக்கு தொடர்ந்தால், 2036-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் 63 டிரில்லியன் டாலரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவே 40 டிரில்லியன் டாலர் கடனை எதிர்கொண்டுள்ள நிலையில், செலவைக் குறைத்து வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இந்த கடன் சுமை மேலும் தீவிரமடையும் என்ற எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.

