நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவின் ராணுவ விமானத் தளங்கள் மீது உக்ரைன் முதன்முறையாக உக்கிரமான தாக்குதலை நடத்தியது. உக்ரைன் ராணுவம், ஸ்பைடர்வெப் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் கீழ், ரஷ்யாவின் உள் பகுதிகளில் உள்ள இர்குட்ஸ்க், முர்மான்ஸ்க், இவானோவோ, ரயசான் மற்றும் அமூர் ஆகிய ஐந்து ராணுவ விமானத் தளங்களை இலக்காகக் கொண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற ரஷ்யாவின் TU-95, TU-22M, A-50 போன்ற முக்கிய ராணுவ விமானங்கள் உள்பட 41 விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. தவிர, கிரிமியாவிற்குச் செல்லும் ரஷ்யாவின் பாலத்தை நீருக்கடியில் வெடிபொருட்களால் தாக்கியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது.
உக்ரைனின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, ரஷ்யா பதிலடி கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதை, அமெரிக்க அதிபர் ட்ரம்பும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. கீவ், லிவிவ் மற்றும் சுமி உள்ளிட்ட 9 நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, "இன்று, நாட்டின் பல பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷ்யா ஏவிய 400 ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் 80 பேர் காயமடைந்தனர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, உலகில் உள்ள அனைவரும் இந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை. புதின் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறார். அவர் தொடர்ந்து போரை நடத்துவதற்கு தனக்கென நேரத்தை வாங்கிக் கொள்கிறார். குறிப்பாக, போர் நிறுத்தம் தேவை. அதைச் சாத்தியமாக்கவும் தாக்குதல்களை நிறுத்தவும் ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.