new Air Force One plane gifted by Qatar web
உலகம்

கத்தார் அளித்த $400 மில்லியன் விமானம்.. ஊழல் புகாரில் டிரம்பை குறிவைக்கும் எதிர்க்கட்சிகள்.!

இத்தகைய வெளிநாட்டு பரிசு அமெரிக்க அரசியலமைப்பை மீறுவதாகவும், இது நவீன வரலாற்றின் மிகப்பெரிய லஞ்சம் எனவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

PT WEB

அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானமாகச் செயல்படவுள்ள போயிங் 747-8 ரக விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 2025 இல் கத்தார் அரசாங்கத்திடமிருந்து அமெரிக்கா பரிசாகப் பெற்ற, 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஆடம்பர விமானத்தை முதன்முறையாக டிரம்ப் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

new Air Force One plane gifted by Qatar

வாஷிங்டனுக்கு வெளியே அமெரிக்க அதிபருக்கான விமானத் தளமாகச் செயல்பட்டு வரும் 'ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்' (Joint Base Andrews) ராணுவத் தளத்தில் விமானத்தை அறிமுகப்படுத்திய டிரம்ப், அங்கு கூடியிருந்த ராணுவத்தினரிடையே இதைப் போன்ற ஒன்று இனி ஒருபோதும் இருக்காது. இது மிகவும் தனித்துவமானது, உலகின் மிக ஆடம்பரமான விமானமாகக் கருதப்படுகிறது, இது உருவாக்கப்பட்டபோது, ​​இனி ஒருபோதும் காண முடியாத அளவிலான சிறப்பம்சங்களுடன் இது கட்டமைக்கப்பட்டது என்றார்.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் காலம் முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் (VC-25A) விமானத்தில் சமீபகாலமாகத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு வந்தன. மேலும், போயிங் நிறுவனம் தயாரித்து வரும் அடுத்த தலைமுறை அதிபர் விமானங்கள் வரத் தாமதமாவதால், கத்தார் அமீரிடம் பேசி இந்த புதிய மாடல் விமானத்தை டிரம்ப் பெற்றுள்ளார்.

போயிங் நிறுவனம் புதிய விமானங்களை 2028-ல் அதிகாரப்பூர்வமாக வழங்கும் வரை, கத்தாரின் இந்த சொகுசு ஜெட் விமானம்தான் அமெரிக்க அதிபரின் பறக்கும் அலுவலகமாக (Bridge Aircraft) செயல்படும் என்று அமெரிக்க விமானப்படை உறுதி செய்துள்ளது.

new Air Force One plane gifted by Qatar

டிரம்ப் இவ்வாறு கத்தார் அரசிடமிருந்து இவ்வளவு பெரிய தொகையிலான சொகுசுப் பரிசைப் பெற்றது அந்நாட்டு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்கள், இது நவீன அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய லஞ்சம் (Bribe Force One) என்று டிரம்ப் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

அமெரிக்க அரசியலமைப்பின் விதிகளின்படி (Foreign Emoluments Clause) நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி வெளிநாட்டுப் பரிசுகளைப் பெறக் கூடாது என்றும், கத்தாருடன் டிரம்ப் குடும்பம் வைத்துள்ள பல பில்லியன் டாலர் கோல்ஃப் ரிசார்ட் வணிக ஒப்பந்தங்களுக்குக் கைமாறாகவே இந்த சொகுசு விமானம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Trump & Emir Sheikh Tamim bin Hamad Al Thani

இவ்வளவு விலையுயர்ந்த ஒரு சொகுசு விமானம் நமக்கு இலவசமாகக் கிடைக்கும்போது, அதை வேண்டாம் என்று மறுப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல; இதன் மூலம் அமெரிக்க வரி செலுத்துவோரின் பல நூறு மில்லியன் டாலர் பணம் மிச்சமாகியுள்ளது என்று தனது ட்ரூத் சோசியல் (Truth Social) பக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் டிரம்ப். மேலும், இந்த விமானத்தின் உட்புறத்தில் ராணுவப் பாதுகாப்பு மற்றும் கம்யூனிகேஷன் அமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளது என்றும் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் இந்த புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் பிரம்மாண்ட வான்வழிப் பயணத்தை வழிநடத்தும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.