TRUMP உடன் போட்டோ எடுக்க கெஞ்சினாரா மெலோனி? தலைவர்களிடையே முற்றும் மோதல்! மெலோனிக்கு பெருகும் ஆதரவு!
இந்திய பிரதமர் மோடிக்கும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையே நல்ல நட்புறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் நடந்த சந்திப்பின்போது கூட பிரதமர் மோடி, மெலோனிக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்தது சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு நேர்மாறாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் இத்தாலி பிரதமர் மெலோனியின் மோதல் போக்கு தொடர்கிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.
பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டின் போது, ட்ரம்பும், மெலோனியும் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெலோனி, இருநாட்டு உறவில் எந்த மாற்றமும் இல்லை, எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றார்.
இந்நிலையில், இத்தாலிய தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி தன்னிடம் கெஞ்சியதாக தெரிவித்தார். மேலும் அவருக்காக தான் வருந்துவதாகவும் ட்ரம்ப் கூறினார்.
அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு இத்தாலியில் பெரும் பரபரப்பை கிளப்பியது. ட்ரம்பின் கருத்து முற்றிலும் புனையப்பட்டது என்று மெலோனி நிராகரித்துள்ளார். இ த்தாலி வெளியுறவு அமைச்சர் அடுத்தவாரம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்க பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் காரணமாக அமெரிக்க- இத்தாலி உறவில் உரசல்கள் எழுந்த நிலையில், ட்ரம்பின் கருத்து இதனை மேலும் மோசமாக்கியுள்ளது.
இரு தலைவர்கள் சந்திப்பின்போது ஒரு சிறியசோஃபாவில் இருவரும் அமர்ந்து புன்னகைத்தபடி பேசிக்கொண்டிருந்ததை அதுவரை ஊடகங்கள் படம்பிடித்துக்கொண்டிருந்தன.
தன்னிடம் பேசியதற்காக மெலோனி மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் என்றும் ட்ரம்ப் கூறியதும் மெலோனியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்ஸ்டாவில் 70 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ள மெலோனி,அதிலேயே தனது கருத்தை பகிர்ந்துள்ளார். தனது கூட்டணி நாடுகளிடம் ஏன் அமெரிக்க அதிபர் இப்படி நடந்துகொள்கிறார் என்றே தனக்குத் தெரியவில்லை என்று மெலோனி கூறியுள்ளார்.
தானோ தனது நாடோ எதற்கும் கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை என்று மெலோனி கூறியுள்ளார்.
ட்ரம்பின் லேட்டஸ்ட் பேட்டிக்கு எதிர்வினையாற்றியுள்ள இத்தாலி அதிபர் செர்ஜியோ மாட்டரெல்லா Mattarella, உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மெலோனிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். யாருக்கும் இத்தாலி பிரதமரை இத்தகைய ஆணவத்தொனியில் பேச உரிமை இல்லை என்று செனட் உறுப்பினர் Filippo Sensi கூறியுள்ளார். இவரைப்போன்ற செனட் உறுப்பினர்கள் தொடங்கி, பொதுமக்கள் வரை மெலோனிக்கு ஆதரவாகவும், ட்ரம்பை கண்டித்தும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். ட்ரம்ப் பதவியேற்றது முதலே ஐரோப்பியத் தலைவர்கள் பற்றி கடுமையான சொற்களைக் கூறி எதிர்ப்பை பெற்று வருகிறார்.

