பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே இறந்து விட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், அதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும், அவருடைய சகோதரிகள் அவரைச் சந்திக்கவும் அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்டை மாநிலமான பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இம்ரான் கான். முன்னாள் பிரதமரான இவர், ஊழல் உட்பட பல வழக்குகளில் சிக்கி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் உள்ளார். தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்புப் படையினரால் தாங்கள் தாக்கப்பட்டோம் என்றும் அவரது சகோதரிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் இம்ரான் கான், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ’9-க்கு 11 அடி கூண்டு தனிமைச் சிறையில் இருப்பதாகவும், புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள்கூட தமக்குக் கிடைப்பதில்லை’எனவும் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அரசாங்கம் இம்ரான் கானுடனான சந்திப்புகளுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ’இம்ரான் கான் சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்றும் அவரது உடல் சிறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது’என்றும் ஆப்கானிஸ்தான் டைம்ஸ் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இம்ரான் கான் மரணம் குறித்த செய்தி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இம்ரான் கான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், சிறையிலேயே இருப்பதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இம்ரானின் உடல்நிலை குறித்த ஊகங்கள் ஆதாரமற்றவை என்றும், அவருக்கு முழுமையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இம்ரான் கட்சி தொண்டர்களும் இம்ரானின் சகோதரிகளும் நேற்று அடியாலா சிறைச்சாலை சோதனைச் சாவடி அருகே உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இம்ரான் கானுடன் அவரது சகோதரிகள் சந்திக்க ஒரு ஏற்பாடு செய்யப்படும் என்று சிறை அதிகாரிகளும் காவல்துறையினரும் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி, அவருடைய சகோதரிகள் இன்று பிற்பகுதியிலும் டிசம்பர் 2ஆம் தேதியும் இம்ரான் கானை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
முன்னதாக, நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், இம்ரானை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று அவரது சகோதரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றமும் வாரத்திற்கு இரண்டு முறை இம்ரானின் குடும்பத்தினரைப் பார்வையிட உரிமையை அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டது.