trump - pope leo web
உலகம்

"கொடுங்கோலர்கள் கையில் உலகம்.." ட்ரம்ப்பை வறுத்தெடுத்த POPE.. BIBLE வசனத்தால் பதிலடி!

உலகத் தலைவர்கள் மற்றும் போர்ச் சூழல் குறித்து போப் லியோ முன்வைத்துள்ள மிகக் கடுமையான விமர்சனங்கள் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

INIYA FRANK

கேமரூன் பயணத்தில் போப் லியோ, உலகத் தலைவர்கள் போர்களுக்காக பில்லியன் டாலர்கள் செலவழிப்பதை கடுமையாக விமர்சித்து, சில கொடுங்கோலர்கள் உலகத்தை சீரழிக்கிறார்கள் என எச்சரித்தார். ஈரான்-இஸ்ரேல் பதற்றம், ட்ரம்பின் ‘நாகரிகம் அழியும்’ மிரட்டல் ஆகியவற்றை கண்டித்த அவர், பைபிள் ஏசாயா வசனத்தை மேற்கோள் காட்டி, ரத்தக் கைகளால் செய்யும் பிரார்த்தனைகளை கடவுள் ஏற்கமாட்டார் எனத் தாக்கமாக கூறினார்.

கேமரூன் (Cameroon) நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான திருத்தந்தை போப் லியோ, உலகத் தலைவர்கள் மற்றும் போர்ச் சூழல் குறித்து முன்வைத்துள்ள மிகக் கடுமையான விமர்சனங்கள் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. போர்களுக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிடும் தலைவர்களைச் சாடிய அவர், உலகம் ஒரு சில கொடுங்கோலர்களால் சீரழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அழிப்பதற்குக் குறைந்த காலமே போதும், ஆனால் கட்டியெழுப்ப ஒரு வாழ்நாள் போதாது என்பதைப் போரை முன்னெடுப்பவர்கள் உணர வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

pope leo - Trump

குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் போப் லியோ ஆகியோருக்கு இடையே ஏற்கனவே கருத்து மோதல்கள் இருந்த நிலையில், தற்போது போப்பின் பேச்சு ட்ரம்ப் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ நடவடிக்கைகளை போப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் விடுத்த "ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும்" என்ற எச்சரிக்கைக்கு போப் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இதற்குப் பதிலடியாக, "போப் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்" என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், போப் அமெரிக்காவில் பிறந்தவர் என்பதால்தான் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும், அவர் வெளியுறவுக் கொள்கையில் பலவீனமானவர் என்றும் ட்ரம்ப் விமர்சித்திருந்தார்.

கடந்த ஆண்டு பதவியேற்ற போப் லியோ, அமெரிக்காவில் பிறந்த முதல் போப் ஆவார். இவர் ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளையும் விமர்சித்துள்ளார். ட்ரம்ப்பின் விமர்சனங்கள் குறித்துத் தான் அச்சப்படவில்லை என்றும், தொடர்ந்து அமைதிக்காகப் பேசுவேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், இயேசுவை வைத்துப் போரை எவரும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார். பைபிளில் உள்ள "உங்கள் கைகள் ரத்தத்தால் நிறைந்திருப்பதால், நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளை நான் கேட்க மாட்டேன்" என்கிற ஏசாயா அதிகாரத்தை மேற்கோள் காட்டி அவர் ட்ரம்ப் தரப்பிற்குப் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) போரை ஆதரிக்கும் வகையில் ஆற்றிய உரையும் போப்பை அதிருப்தி அடையச் செய்திருந்தது.

pope leo

தற்போது கேமரூனில் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பமெண்டா (Bamenda) நகருக்குச் சென்ற அவர், அங்குள்ள புனித ஜோசப் பேராலயத்தில் (St. Joseph’s Cathedral) உரையாற்றினார். ஆப்பிரிக்க நிலத்தின் வளங்களைச் சுரண்டுபவர்கள், அதில் கிடைக்கும் லாபத்தை மீண்டும் ஆயுதங்களிலேயே முதலீடு செய்வதால், அந்தப் பகுதியில் மரணமும் சீர்குலைவும் தொடர்கதையாகி வருவதாகக் குற்றம் சாட்டினார். இது தலைகீழாக மாறிய உலகம் என்றும், தங்களின் சுய லாபத்திற்காகக் கடவுளின் பெயரையே சிதைப்பவர்களை நேர்மையான மனசாட்சி கொண்டவர்கள் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 2017 முதல் அங்கு நடக்கும் உள்நாட்டுப் போரால் சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், "அமைதி என்பது நாம் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றல்ல, அது பக்கத்து வீட்டாரைச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்வதன் மூலம் கிடைக்கக்கூடியது" என்று அவர் உருக்கமாகப் பேசினார்.

போப் லியோவின் இந்த ஆப்பிரிக்கப் பயணம் அந்தப் பிராந்தியத்தில் கத்தோலிக்க மதத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. 2024-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, உலகில் உள்ள கத்தோலிக்கர்களில் 5-ல் ஒரு பகுதியினர் ஆப்பிரிக்காவில்தான் வசிக்கின்றனர். போப்பின் இந்தத் துணிச்சலான கருத்திற்கு கேன்டர்பரி பேராயர் சாரா முல்லாலி (Archbishop of Canterbury, Sarah Mullally) உள்ளிட்ட உலக சமயத் தலைவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.