2 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 4-ம் தேதி இந்தியாவிற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதின் 23வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் அதிபர் புதினை வரவேற்றார் . இரு தலைவர்களும் இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 7 லோக் கல்யாண் மார்க்கிற்கு ஒரே காரில் பயணம் செய்தனர். ஆனால், இந்தமுறை வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவிற்கு வரும்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் வழக்கமான ரேஞ்ச் ரோவர் அல்லது மெர்சிடிஸ் காருக்குப் பதிலாக, வெள்ளை டொயோட்டா ஃபார்ச்சூனரில் இருவரும் சென்றது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களும் பயணிக்க டொயோட்டா ஃபார்ச்சூனரைத் தேர்ந்தெடுத்தது வேண்டுமென்றே செய்யப்பட்ட நடவடிக்கையா அல்லது தற்செயலாக நடந்ததா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் இல்லை. இருந்தாலும், இந்த சம்பவம் குறித்து, நிபுணர்களும் புவிசார் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, ”இரு நாட்டு தலைவர்களும் டொயோட்டா ஃபார்ச்சூனர் சிக்மா 4 என்ற ஐரோப்பிய நிறுவனத்தின் காரில் பயணித்தது திட்டமிடப்பட்ட ராஜதந்திர நடவடிக்கையாகும். ஏனெனில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன. எனவே, ரேஞ்ச் ரோவர் அல்லது மெர்சிடிஸ் ஆகிய ஐரோப்பிய கார் நிறுவனங்களை தவிர்த்து, ஜப்பான் கார் நிறுவனமான டொயோட்டா காரில் பயணித்துள்ளனர்” என தெரிவிக்கின்றனர். முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலோசோ சந்திப்பில், தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைக்கச் ஒரு வெள்ளை ஃபார்ச்சூனர் காரில் பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் பயணித்த டொயோட்டா ஃபார்ச்சூனர் சிக்மா 4 (MT) என்ற கார் ஓர் ஐரோப்பிய நிறுவனத்தை சார்ந்ததாக இருந்தாலும், மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின்படி, கர்நாடாகவில் அசெம்பிள் செய்யப்பட்டது. டீசலில் இயங்கக் கூடிய இந்த வெள்ளை நிற ஃபார்ச்சூனர் கார், MH01EN5795 என்ற மகாரஷ்டிரப் பதிவு எண்ணைக் கொண்டிருந்தது.
மேலும், பிரதமர் மோடி வைத்திருக்கும் ரேஞ்ச் ரோவர் அல்லது மெர்சிடிஸ் கார்களில் மூன்று வரிசைகள் இல்லை என்றும் அதன் காரணமாக மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு இடமளிக்க முடியாததால் மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட இந்தக் கார் தேர்வு செய்யப்பட்டதாகவும் பிரதமர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.