டாக்டர் பி.ஆர். அம்பேதகர் 70-வது நினைவு நாள்., தமிழக அரசியல் தலைவர்கள் புகழாரம்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி ”பாபா சாகேப்” என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 70-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் பாபா சாகேப் அம்பேத்கரை நினைவு கூர்ந்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதுகுறித்துப் பார்க்கலாம்...
புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர்.!
முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், ”புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள். எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி. அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்” என தெரிவித்துள்ளார்.
சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர்!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் தளப் பதிவில், “சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித்-இஸ்லாமியர் எழுச்சி நாளாக இந்நாளைக் கடைபிடிப்போம்.
விசிக தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளப் பதிவில், “மதச்சார்பற்ற அரசை நிறுவி, சமத்துவ இந்தியாவைக் கட்டமைக்க அரசமைப்புச் சட்டத்தின் மூலம், அடித்தளம் அமைத்த மாமனிதர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றுவோம். சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடித்து அவரது கனவை நனவாக்க இந்நாளில் உறுதியேற்போம். இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம். பாபர் மசூதி இடிக்கபட்ட இந்நாளில் தலித்-இஸ்லாமியர் ஒற்றுமையை வென்றெடுப்போம். தலித்-இஸ்லாமியர் எழுச்சி நாளாக இந்நாளைக் கடைபிடிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லோருக்குமான தலைவர்!
தவெக தலைவர் விஜயின் எக்ஸ் தளப் பதிவி, “அரசியலமைப்பு தந்தை, சமத்துவ இலட்சியத்தின் வழிகாட்டி, சமூகநீதி சிந்தனையின் நாயகர், மதவாத அரசியலுக்கு எதிரான போர்வீரர், பெண் விடுதலை சிந்தனைக்கு முன்னோடி, தொழிலாளர் உரிமைக்குப் போராடிய புரட்சியாளர், ”எல்லோருக்குமான தலைவர்”. நமது கொள்கைத்தலைவரான அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளான இன்று அவர் புகழைப் போற்றுவோம்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கருக்கு புகழஞ்சலி!
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தலைசிறந்த தேசியவாதியும், சமூக நீதிக்கான புரட்சியை முன்னெடுத்துச் சென்றவருமான, பாபா சாகேப், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று. மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் விளங்கியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு அடித்தளம் இட்ட மாமனிதர். சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளத்து

