Vladimir Putin In India
Vladimir Putin In Indiapt web

ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகை.. முக்கிய நிகழ்வுகள் 10

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் இந்திய பயணம் மற்றும் அவர் பங்கேற்ற நிகழ்வுகள் தொடர்பான முக்கியச் செய்திகளை காணலாம்.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் இந்திய பயணம் மற்றும் அவர் பங்கேற்ற நிகழ்வுகள் தொடர்பான முக்கியச் செய்திகளை காணலாம்.

1. ரஷ்ய அதிபர் புடினின் இந்தியா பயணம் நிறைவு

அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு விளாடிமர் புடின் டெல்லியில் இருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், இந்தியாவிற்கு 2 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். நேற்றுமுன் தினம் டெல்லி வந்த புடினை, பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து இருவரும் ஒரே காரில் பயணத்தது கவனம் பெற்றது. புடினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார். நேற்று டெல்லியில் நடந்த இந்தியா-ரஷ்யா இடையேயான 23ஆவது உச்சி மாநாட்டில் புடினும், மோடியும் பங்கேற்று, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசித்தனர். புடினின் இந்த பயணத்தின் போது இந்தியா, ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. பின்னர், விளாடிமர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட பின்னர், புடின் டெல்லியில் இருந்து ரஷ்யா புறப்பட்டார்.

2. இந்தியா-ரஷ்யா நட்புறவை குறிப்பிட்ட திரெளபதி முர்மு

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசு முறை விருந்து அளிக்கப்பட்டது. புடினின் இந்திய பயணத்தின் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அரசு சார்பில் புடினுக்கு சிறப்பு விருந்தளித்தார். அப்போது பேசிய புடின், இந்தியா- ரஷ்யாவின் வளர்ச்சி மற்றும் இருநாட்டு மக்களின் நலனுக்காக அனைத்து விதத்திலும் செயல்பட தயார் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய திரெளபதி முர்மு, பல தசாப்தங்களாக தொடரும் இந்தியா, ரஷ்யா உறவு மேன்மேலும் வலுவடையும் எனக் குறிப்பிட்டார்.

3. புடின் விருந்தில் ராகுலுக்கு அழைப்பில்லை காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு அழைப்பு!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த அதிகாரப்பூர்வ விருந்திற்கு காங்கிரஸ் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வெளிநாட்டு தலைவர்கள் அரசுமுறைப் பயணமாக வரும்போது, குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மூத்த எம்.பி.க்கள் பொதுவாக அழைக்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறையில், சசி தரூர் மட்டும் அழைக்கப்பட்டிருப்பதும், ராகுல் காந்தி அழைப்பில் இடம்பெறாததும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

4. உக்ரைன் அமைதிக்காக இந்தியா துணை நிற்கும்: மோடி

pm modi
pm modipt web

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா ஆரம்பம் முதலே அமைதிக்காகவே குரல் கொடுத்து வந்துள்ளதாகவும், நிரந்தர தீர்வுக்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். கடந்த எட்டு தசாப்த கால உலக சவால்களுக்கு மத்தியில், இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்போல அசைக்க முடியாமல் நிலைத்து நிற்கிறது என்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இருநாடும் தோளோடு தோள் நின்று போராடுவதாகவும் தெரிவித்தார்.

5. இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகம்: புடின் உறுதி

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், இந்தியாவிற்கான எரிபொருளை தடையில்லாமல் விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் பிற எரிசக்தி வளங்களை வழங்கும் நம்பகமான விநியோகஸ்தராக ரஷ்யா உள்ளது என்று புடின் கூறினார். இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரத்திற்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை தடையின்றித் தொடரத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

6. கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம்: புடின்

ரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளத்தில் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக புடின் தெரிவித்தார். ஆறு அணு உலைகளைக்கொண்ட இத்திட்டத்தில், இரண்டு உலைகள் ஏற்கெனவே எரிசக்தி கட்டமைப்பில் இணைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். அணு உலை முழு பயன்பாட்டுக்கு வரும்போது இந்தியாவின் எரிசக்தி தேவை பூர்த்தியாகும் என்றும் இதன்மூலம் இந்திய தொழிற்சாலைகள், வீடுகளுக்கு இன்னும் மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். சிறிய ரக அணுமின் நிலையம் திட்டம் குறித்தும் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ரஷ்யா தொடர்ந்து இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான கூட்டாண்மை வலுவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

7. ரஷ்ய அதிபர் புடின் - பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதலில் அமைதியின் பக்கம் இந்தியா இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை நல்குவது குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, மோதல்களுக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் புடின், மோதலுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் ரஷ்யா ஈடுபட்டுவருவதாக தெரிவித்தார்.

8. புடினுக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பரிசு

இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு பிரதமர் மோடி அளித்திருந்த பரிசுப் பொருட்கள் அதிகம் கவனம் பெற்றுள்ளது. விளாடிமர் புடினுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களில் காஷ்மீர் குங்குமப்பூ, அசாமின் கருப்பு தேயிலை, ஆக்ராவின் பளிங்கு செஸ் செட், கைகளால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி குதிரை சிற்பம், முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் கோப்பைகள், ரஷ்ய மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் இந்த பரிசுப் பொருட்கள் தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

9. புடினுக்கு வழங்கப்பட்ட இந்திய பாரம்பரிய உணவுகள்

ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட சிறப்பு விருந்தில் இடம்பெற்றிருந்த உணவுப் பொருட்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய சமையலின் தனித்துவ சுவைகளை வெளிப்படுத்தும் முற்றிலும் சைவ வகை உணவுகள் மட்டுமே விருந்தில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக முருங்கை இலை சூப், கருப்பு கொண்டகைக் கடலை கொண்டு செய்யப்பட்ட காலே சனே கே ஷிகம்பூரி, ஜஃப்ரானி பனீர் ரோல், தந்தூரி பர்வான் ஆலூ, அச்சாரி பெங்கன், யெல்லோ டால் தட்கா போன்ற உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன. ட்ரை ஃப்ரூட் அண்ட் ஸாஃப்ரன் புலாவ், லச்சா பரோட்டா பல்வேறு இந்திய இனிப்பு மற்றும் பழ வகைகளும் விருந்தில் முக்கிய இடம்பிடித்திருந்தது. இத்துடன். இந்தியா, ரஷ்யா பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இசைக் கச்சேரியும் சிறப்பு விருந்தின் போது கவனம் ஈர்க்கும் வகையில் இருந்தது.

10. மோடி - புடின் சந்திப்பு: கவனம் ஈர்த்த செடி

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையேயான உரையாடலின்போது, மேசை பின்னணியில் வைக்கப்பட்டிருந்த அழகான செடி ஒன்று தனி கவனத்தைப் பெற்றுள்ளது. ஹெலிகோனியா என்றழைக்கப்படும் இச்செடி தனது பிரகாசமான நிறம் மற்றும் நேர் நிமிர்ந்த வடிவமைப்பால், வளர்ச்சி, செழிப்பு, நல்லிணக்கம் மற்றும் புதிய தொடக்கம் உள்ளிட்ட அர்த்தங்களை குறிக்கிறது. தலைவர்களின் சந்திப்புகளில் இச்செடிகள் இடம்பெறுவது தற்செயலானது அல்ல என்பதால், ஹெலிகோனியா செடி வைக்கப்பட்டிருப்பது இந்தியா, ரஷ்யா இடையேயான ராஜதந்திர நட்புறவை உலகுக்கு பறைசாற்றும் விதம் என்று கருதப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com